மகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 30ஆவது முறையாகவும் இன்று எம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. 

“தன்னிறைவுமிக்க யுகம் - மகாவலி இளம் சமுதாயத்திற்கு உயரிய மதிப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இவ்வருட விளையாட்டு விழாவில், 10 மகாவலி வலயங்களையும் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளதுடன், தேசிய மட்டத்தில் இடம்பெறும் 42 போட்டி நிகழ்வுகள் இதில் இடம்பெறவுள்ளன.

அதன் ஆரம்ப விழாவானது மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க மற்றும் மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், நிறைவு விழா நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இலங்கை விளையாட்டுத் துறைக்கு சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு அதிகாரிகள் மற்றும் நடுவர்களை உருவாக்கியுள்ள நாட்டின் பழைமை வாய்ந்த விளையாட்டு விழாவாக இதனைக் குறிப்பிடலாம். இற்றைக்கு 32 வருடங்களுக்கு முன் 1986ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டு விழா 7 வலயங்களை உள்ளடக்கியதாக இருந்ததுடன், தற்போது 10 வலயங்கள் வரையும் அது விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

1986 இல் கல்னேவ நகரில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டு விழா 2012ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இடம்பெற்றதுடன், 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இடம்பெறவில்லை.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் மீண்டும் இவ் விளையாட்டு விழா ஆரம்பிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய மகாவலி வலய மாணவ, மாணவிகளின் திறமைகள் சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் வருடந்தோறும் இவ் விளையாட்டு விழா விமரிசையாக ஏற்பாடு செய்யப்படுகின்றது.

அன்று முதல் இன்று வரை சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த பல விளையாட்டு வீர வீராங்கனைகள் மகாவலி அரங்கில் உருவாகியுள்ளனர்.

இலங்கையில் உருவான மிகச் சிறந்த ஓட்ட வீராங்கனைகளுள் ஒருவரான ஸ்ரீயாணி குலவங்ச, மகாவலி எச் வலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிபெற்றதுடன், அதன் பின்னர் ஆசிய போட்டிகள் வரை பதக்கங்களை வென்றுள்ளார்.

இலங்கை துவிச்சக்கர வண்டி ஓட்ட வீராங்கனையான யூ.டீ.ஸ்ரீயலதா, இலங்கை கரப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ரேணுகா அபேகுணவர்தன யாப்பா மற்றும் இலங்கை கபடி ஆண்கள் அணியின் முன்னாள் தலைவர் விமல் ரோஹண ஆகியோர் மகாவலி விளையாட்டு விழாவின் ஊடாக உருவாகிய விளையாட்டு வீரர்களுள் சிலராவர்.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க விக்டோரியா வலயத்தை சேர்ந்தவர்  என்பதோடு, இவர் மகாவலி வலயங்களில் சமீப காலத்தில் உருவான மிகச் சிறந்த விளையாட்டு வீரராவார். 

இவ் ஆண்டு மகாவலி விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பல விசேட வெகுமதிகள் காத்திருக்கின்றன.

முதலாம் இடத்தை பெறும் மகாவலி வலயத்திற்கு உடற்பயிற்சி நிலையம் வழங்குதல், சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு மகாவலி காணியொன்றை வழங்குதல், விசேட திறமைகளை வெளிக்காட்டும் 10 வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு பயிற்சிக்கான புலமை பரிசில்கள், தேர்ந்தெடுக்கப்படும் 20 விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தொழில்சார் கற்கைநெறிகள், சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனையை உருவாக்கிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் அவ்விரு தினங்களின் நிறைவின் போதும் இலங்கை விமானப் படையினரின் பரசூட் வான வேடிக்கை, இலங்கை பொலிஸ் பிரிவினரால் முன்வைக்கப்படும் உத்தியோகபூர்வ நாய்களின் கண்காட்சி மற்றும் 1,300 மகாவலி வலய பிள்ளைகளின் பங்குபற்றலில் இடம்பெறும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தேகப்பியாச நிகழ்வும் ஜிம்னாஸ்டிக் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.

ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை மகளிர் வலைபந்தாட்ட அணியினர் மற்றும் முன்னாள் மகாவலி வீர, வீராங்கனைகள் இவ்வருட விளையாட்டு விழாவில் விசேட அதிதிகளாக கலந்துகொள்ளவுள்ளனர்.

போதையிலிருந்து விடுபட்ட ஆரோக்கியமான இளம் சமுதாயத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் போதை ஒழிப்பு மற்றும் சிறுநீரக நோய் நிவாரணம் பற்றிய ஜனாதிபதி செயலணிகளின் தெளிவூட்டல் செயற்திட்டங்கள் இந்த விளையாட்டு விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.