ராஜீவ்  கொலை வழக்கு கைதிகள்  விடுதலை தொடர்பில் ஆதாரமற்ற அச்சங்கள்

Published By: Digital Desk 4

15 Sep, 2018 | 12:56 PM
image

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஆயுட்காலச் சிறைக்கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழ்நாடு அரசாங்கம் சிபாரிசு செய்தபின்னரும் கூட, அவர்கள் விடுவிக்கப்படுவார்களா என்று சிலர் சந்தேகம் கிளப்பியிருக்கிறார்கள். 

ஆனால், மாநில அரசாங்கத்தின் சிபாரிசின் பிரகாரம் செயற்பட்டு அவர்களை விடுதலை செய்வதைத் தவிர ஆளுநருக்கு வேறு தெரிவு இல்லை என்று உறுதியாக நம்புவதாக இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும் இந்திய பத்திரிகைப் பேரவையின் தலைவருமான மார்க்கண்டே கட்ஜு கூறியிருக்கிறார்.

சென்னை இந்து ஆங்கிலப் பத்திரிகையில் வெள்ளியன்று அவர் ' ராஜீவ் காந்தி கொலை ; 7 கைதிகளும் போதுமானளவுக்கு துன்பத்தை அனுபவித்துவிட்டார்கள் ' என்ற தலைப்பிலான கட்டுரையில் ' எமது பாராளுமன்ற ஜனநாயக முறைமை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இரவலாகப் பெறப்பட்டதாகும். அதில் ஆளுநர் எனப்படுபவர் ஐக்கிய இராச்சியத்தின் மன்னரைப் பெருமளவுக்கு ஒத்தவராவார். அரசியலமைப்பு ரீதியான ஒரு தலைவரான அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படவேண்டுமே தவிர, தனது சொந்த தற்துணிபின்படி செயற்படலாகாது ' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அரசியல், சமூக மற்றும் சட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பெரும் விவாதங்களை மூளவைக்கக்கூடிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவருபவரான கட்ஜு 7 கைதிகளினதும் விடுதலையை உறுதியாக ஆதரித்து முன்வைத்திருக்கும் வாதத்தில் முன்னைய பல முக்கியமான சட்டப்பிரச்சினைக்குரிய வழக்குகளின் தீர்ப்புக்களை உதாரணம் காட்டியிருக்கிறார்.

அவர் எழுதியிருப்பதாவது ;

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகளில் ஒருவரான ஏ.ஜி.பேரறிவாளனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த கருணைமனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து அவர்கள் சகலரையும் மன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு தமிழ்நாடு அரசாங்கம் சிபாரிசு செய்திருந்தது.

மாநில அரசாங்கத்தின் அந்தச் சிபாரிசுக்குப் பின்னரும் கூட, கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா என்று சிலர் சந்தேகம் கிளப்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மாநில அரசாங்கத்தின் சிபாரிசின் பிரகாரம் செயற்பட்டு அவர்களை விடுதலை செய்வதைத் தவிர, ஆளுநருக்கு வேறு தெரிவு இல்லை என்றே நம்புகிறேன்.

ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இரவலாகப் பெறப்பட்ட எமது பாராளுமன்ற ஜனநாயக முறைமையில் ஐக்கிய இராச்சியத்தின் மன்னரைப் பெருமளவுக்கு ஒத்ததே ஆளுநர் பதவி.அரசியலமைப்பு ரீதியான தலைவரான அவர் தனது தற்துணிபு அதிகாரத்தின் பிரகாரம் செயற்படலாகாது.அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரம செயற்படவேண்டும்.1974 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுஷாம்ஷெர் சிங் என்பவருக்கும் பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில் பிரகடனம் செய்த சட்டமே இதுவாகும். அரசியலமைப்புக்கான 42 வது திருத்தத்துக்கு முன்னரே அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது.42 வது திருத்தமும் அரசியலமைப்பில் ஏற்கெனவே உட்கிடையாகச் சொல்லப்பட்டிருந்ததையே கூறியது.

 இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து 1980 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசுக்கும் மாரு ராம் என்பவருக்கும் இடையிலான வழக்கிலும் 1988 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் கெஹார் சிங் என்பவருக்கும் இடையிலான வழக்கிலும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய இரு தீர்ப்புக்களை இங்கு கவனத்தில் எடுக்கவேண்டியது முக்கியமானதாகும். அதாவது அரசியலமைப்பின் 72 வது சரத்தை ( குறிப்பிட்ட சில வழக்குகளில் மன்னிப்பு வழங்குதல் , தண்டனை இடைநிறுத்தல், தண்டனைக் குறைப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் பற்றியது ) அல்லது 161 வது சரத்தை ( அதே செயன்முறைகளைப் பொறுத்தவரை ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம் பற்றியது) நடைமுறைப்படுத்தும்போது ஜனாதிபதியோ அல்லது ஆளுநரோ அமைச்சரவையின் ஆலோசனையின் பேரிலேயே செயற்படவேண்டுமே தவிர , தங்களது சொந்தத் தற்துணிபு அதிகாரத்தின் பிரகாரம் அல்ல என்று தீர்ப்பில் கூறப்பட்டது.ஆகவே ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கைதிகளை விடுதலை செய்வதைத் தவிர தமிழ்நாடு ஆளுநருக்கு வேறு வழியில்லை. 

இரு அச்சங்கள்

தமிழ்நாடு அரசாங்கத்தின் சிபாரிசுக்குப் பின்னரும் கூட , 7 கைதிகளையும் விடுதலை செய்யமுடியுமா என்று சந்தேகம் கிளப்புபவர்கள் இரு அச்சங்களைக் கொண்டுள்ளார்கள்.ஆனால், அவை ஆதாரமற்றவையாகும்.

முதலாவது அச்சம் 2015 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் சிறிஹரன் என்ற முருகனுக்கும் இடையிலான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டதாகும்.அந்தத் தீர்ப்பு குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு இருக்கும் சட்ட ரீதியான அதிகாரத்துடன் தொடர்புபட்டதே தவிர, அரசியலமைப்பின் 161 வது சரத்தின் கீழ் ஆளுநருக்கு இருக்கும் அரசியலமைப்பு ரீதியான அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதை அதை உன்னிப்பாக ஆராய்ந்தால் புரிந்துகொள்ளமுடியும்.

 மத்திய புலனாய்வு பணியகத்தினால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்ட வழக்கொன்றில் தண்டனைக் குறைப்பைச் செய்ய மாநில அரசாங்கம் விரும்பும்போது மத்திய அரசாங்கத்துடன் ஆலோசனை செய்யவண்டிய அவசியத்தை வலியுறுத்தும் குற்றவியல நடைமுறைச் சட்டக்கோவையின் 435 (1) பிரிவு பற்றியே தீர்ப்பு சுட்டிக்காடுடுகிறது.அதேவேளை, அந்தப் பிரிவின் கீழ் ஆலோசனை செய்தல் என்ற சொல் ( Consultation  ) உடன்படுதல்  ( Concurrence  ) என்று கருதப்படக்கூடியதாகவே அர்த்தப்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆனால், 161 வது சரத்தின் கீழ் மன்னிப்பு வழங்குவதற்கான அரசியலமைப்பு ரீதியான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் கீழான சட்டரீதியான அதிகாரத்திலிருந்து வேறுபட்டது.ஆதலால், மேற்கூறப்பட்ட தீர்மானம் மத்திய அரசாங்கத்தின் உடன்பாடு இல்லாமல் மன்னிப்பு வழங்குவதற்கு குறுக்கே நிற்கவில்லை.

இரண்டாவது அச்சம் ஆளுநர் மன்னிப்பு வழங்கினால், அதைத் தன்னிச்சையானது என்று நீதிமன்றம் நிராகரிக்கக்கூடும் என்பதாகும்.மன்னிப்பு வழங்குவதில் ஆளுநரின் செயல் நீதித்துறையின் மீளாய்வுக்கு ஆட்பட்டது எனபதிலும் தன்னிச்சையானதாக அல்லது தீயநோக்குடனானதாக இருந்தால் நீதிமன்றம் அதை ரத்துச் செய்யமுடியும் என்பதிலும் சந்தேகமில்லை.இதை மாரு ராமின் வழக்கிலும் அதையடுத்து வேறு வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் சந்தேகத்துக்கிடமின்றி தீர்ப்புகளில் கூறியிருக்கிறது.

ஆனால், மாநில அரசாங்கத்தின் சிபாரிசின் அடிப்படையில் 7 கைதிகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் மன்னிப்பு வழங்கினால், அவர் தன்னிச்சையாக அல்லது தீயநோக்குடன் செயற்படுகின்றார் என்று சொல்லமுடியுமா? இதற்கு ' இல்லை ' என்பதே நிச்சயமான பதிலாகும்.72 வது சரத்தின் கீழும் 161 வது சரத்தின் கீழும் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் மிகப்பல என்பதுடன் அவற்றுக்கான சந்தர்ப்பங்களும் அடிக்கடி மாறுந்தன்மை கொண்டவையாகும்.அத்தகைய பெருவாரியான காரணங்கள் அல்லது நோக்கங்கள் மத்தியில் இந்தக் கைதிகள் 27 வருடங்களைச் சிறையில் கழித்து போதுமானளவு துன்பங்களையும் அனுபவித்துவிட்டார்கள் என்ற உண்மையும் நிச்சயமாக அடங்கமுடியும்.ஷேக்ஸ்பியரின்  Merchant of Venice நாடகத்தில் 

போஷியா சொன்னது போன்று (Justice should be tempered with mercy) நீதி என்பது கருணையுடன் கலந்து பதப்படுத்தப்பட வேண்டும்   தமிழ்நாடு ஆளுநர் விரைந்துசெயற்பட்டு ஆரவாரமேதுமின்றி 7 கைதிகளையும் இப்போது விடுதலை செய்யவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13