(ப.பன்னீர்செல்வம்,  ஆர்.ராம்)

சிறையிலிருக்கும் யோஷித்த ராஜபக் ஷ வெளியே வந்ததும் கடற்படையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் தன்னிச்சையான செயற்பாடுகள், செலவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இன்று சபையில் தெரிவித்ததோடு, யோஷித்த ராஜபக் ஷ கடற்படை வீரராக தனிப்பட்ட மற்றும் பயிற்சிகளுக்கென 27 தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். 

அதற்கு தேசிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார் என்றும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை பிரதி சபாநாயகர் தலைமையில் காலை 10.30 மணிக்கு கூடியது.

 இதன் போது வாய் மூல கேள்விகளுக்கான விடையளிக்கும் நேரத்தின் போது ஜே.வி.பி எம்பி டாக்டர் நளின்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மேற்கண்டவாறு பதிலை வழங்கினார். 

டாக்டர் நளின்த ஜெயதிலக கேட்ட கேள்வியாவது,

கடற்படை உத்தியோகத்தரான லெப்டினன்ட் வை.கே.ராஜபக் ஷ என் .ஆர்.எக்ஸ் 431 தொடர்பான பயிற்சிகள், வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். 

இதன் போது இடைக் கேள்விகள் பலவற்றை டாக்டர் நளின்த ஜயதிஸ்ஸ எழுப்பினார். 2007 ஜனவரி தொடக்கம் 100 வாரங்கள் தான் கடற்படையில் இருந்துள்ளார். ஆனால் 27 தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார் இது எப்படி?- ரகர் விளையாட்டை பிரசாரப்படுத்தவா அல்லது படையில் இளைஞர்கள் இணைவதை ஊக்குவிக்கவா இவ்வாறு வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டார் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன,

ரஷ்யா நாட்டில் இலங்கைத் தூதுவர் உக்ரேனின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்புக்காக கடற்படையின் ஒருவரை பரிந்துரைக்குமாறு அறிவித்திருக்கின்றார். 

இதற்கமைய கடற்படைத் தளபதி கடற்படை உத்தியோகத்தர் யோஷித்த ராஜபக் ஷவின்  பெயரை பரிந்துரை செய்துள்ளார். பின்னர் பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடனேயே யோஷித்த வெளிநாடு சென்றுள்ளார். 

அவரது 27 பயணங்களுக்கும் பாதுகாப்புச் செயலாளரின் அனுமதி கிடைத்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதியின் அனுமதியும் கிடைத்துள்ளது. உக்ரேன் நாட்டுக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். 

இதற்கு மேலதிகமாக பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, மியன்மார், ஹொங்கொங், கொரியா, மலேசியா, ரஷ்யா, நியூஸிலாந்து, ஜப்பான் என பல நாடுகளுக்கும் விஜயங்களை மேற்கொண்டுள்ளார். 

இதில் தனிப்பட்ட ரீதியான விஜயங்களும் அமைந்துள்ளன. இதன் போது குறுக்கிட்ட நளின்த ஜயதிஸ்ஸ எம்.பி ரஷ்யாவின் தூதுவர் மாமா அவர்  பரிந்துரை செய்ய, தந்தையான ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரான சித்தப்பாவின் அனுமதியுடன் யோஷித்த ராஜபக் ஷ வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றார். 

இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இவ்விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளருக்குமே தெரியும்.

அதேவேளை கடற்படை தளபதி எவ்வாறு அனுமதி வழங்கினார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும்.

தற்போது யோஷித்த ராஜபக் ஷ சிறையில் உள்ளார். அவரது சேவையும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

வெளியில் வந்ததும் வெளிநாட்டு விஜயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சபையில் பதிலளித்தார்.