(நா. தனுஜா)

முத்துராஜவெல எண்ணெய் களஞ்சியத்தொகுதிக்கு கடலினூடாக மசகு எண்ணெய் கொண்டுசெல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை மசகு எண்ணெய் கடலில் கலந்தது.

இதனால் திக்ஓவிட்ட  கடற்பிராந்தியத்தைச் சுழவவுள்ள உஸ்வெட்ட கெய்யாவ முதல் ஜா எல – பமுணுகம வரையிலான கரையை அண்மித்த பகுதிகளில் சுற்றாடல்சார் பிரச்சினைகள் ஏற்படும் அச்சம் ஏற்பட்டிருந்தது. 

கடற்பிராந்தியத்தில் கலந்த மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் பணிகளில் கரையோரப் பாதுகாப்புப் பிரிவு கடற்படை சமுத்திரச் சுழல் பாதுகாப்பு அதிகாரசபை இலங்கைப் பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் என்பன ஈடுபட்டிருந்த அதேவேளை பின்னர் இராணுவத்தினரும் சுத்திகரிப்புப் பணிகளில் இணைந்துகொண்டனர்.

கடலில் கலந்துள்ள மசகு எண்ணெயைச் சுத்தப்படுத்தும் வரை அப்பிரதேசத்தினைப் பயன்படுத்த வேண்டாமென அப்பிரதேசத்தை அண்டியுள்ள பிரதேச மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளில் உள்ள சில இரசாயனங்கள் முத்துராஜவெல பிராந்தியத்திலுள்ள பவளப்பாறைகளுக்குத் தீங்காக அமையும் வாய்ப்புக்கள் உள்ளன.

இவ்விடயம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்களின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடற்பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது கடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுவந்த எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வினை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் விசேட ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் கசிவு ஏற்பட்ட பிராந்தியத்தில் இன்னமும் எண்ணெய் கழிவுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில் அப்பிராந்தியக் கரையோர மணல் மற்றும் பாறைகள் கருநிறத்திற்கு மாறியுள்ளமையினையும் கடலில் எண்ணெய்க் கழிவுகள் மிதப்பதையும் அவதானிக்க முடிகின்றது. 

அக்கடற்பிராந்தியத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும்இ இந்த எண்ணெய்க் கசிவின் காரணமாக கடல்வளத்திற்கும் சுழலுக்கும் ஏதேனும் தாக்கங்கள் ஏற்படுமா என்பது தொடர்பிலும் எண்ணெய் கழிவுகளை முற்றாக அகற்றுவது சாத்தியமா என்பது தொடர்பிலும் பொதுமக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.

முத்துராஜவெல மசகு எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அமைத்துள்ள விசேட ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பிலான உண்மை நிலையினையூம் அதற்கான தீர்வுகளையும் கண்டறிவதன் மூலம் இனியும் இவ்வாறான சுழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதனை உறுதிசெய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.