நாடு முழுவதும் 16 காட்சியறைகளைக் கொண்ட, இலங்கையின் முன்னணி ஆடை விற்பனைத்தொடரான Fashion Bug, அண்மையில் நடைபெற்ற Triumph International Lanka வின் வருடாந்த விற்பனை மாநாட்டில் “ஆண்டின் சிறந்த விற்பனை பங்காளர்” எனும் தங்க விருதை சுவிகரித்திருந்தது.

பெண்களுக்கான உள்ளாடைகள் உற்பத்தியில் ஈடுபடும் சர்வதேச ரீதியில் முன்னணியில் காணப்படும் நிறுவனமாக Triumph இன்டர்நஷனல் திகழ்கிறது. 

கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில், Triumph International Lanka நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகஸ்த்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறு வழங்கப்பட்ட விருதுகளில், “ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தர் நிலையம்”, “ஆண்டின் சிறந்த விற்பனையாளர்”, “ஆண்டின் சிறந்த விற்பனை பங்காளர்”, “சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த விநியோகஸ்த்தர்” மற்றும் “ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தர்” ஆகியன அடங்கியிருந்தன.

Triumph மீது Fashion Bug காண்பித்து வரும் அதீத ஈடுபாடு இந்த விருதை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் சுவீகரித்துள்ளமையின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காட்சியறைக்கு “சிறந்த விற்பனை நிலையம்” தங்க விருது வழங்கப்பட்டிருந்ததுடன், கடந்த ஆண்டில் இந்த விருதை வத்தளையில் அமைந்துள்ள காட்சியறை வெற்றியீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அலங்காரங்கள் மற்றும் உள்ளாடைகளை கொள்வனவு செய்வதற்கு பிரத்தியேகமான பகுதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளதன் மூலமாக இரு தசாப்த காலமாக வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான சேவைகளை வழங்கி வரும் Triumph, எதிர்காலத்தில் பாரிய திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த வருடாந்த நிகழ்வு என்பது, வெறுமனே, சந்தைப்படுத்தல் செயற்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துவிடாமல், விநியோகஸ்தர்களின் வினைத்திறன் வாய்ந்த செயற்பாடுகளுக்கு வெகுமதிகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

பெண்களின் ஷொப்பிங் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்கும் Fashion Bug, அண்மையில் தனது சேலை விற்பனை பகுதியையும் அறிமுகம் செய்திருந்தது. 

கட்டுபெத்த காட்சியறையில் Ethinic Fusion எனும் பிரிவில் வெவ்வேறு நிகழ்வுகளுக்கும், சாதாரண பாவனைக்கும் உதவும் வகையிலமைந்த கண்கவர் சேலைகள், ஷல்வார்கள், ஷல்வார் துணிகள், குர்தாஸ் வகைகள் மற்றும் ஷோல்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு அலங்கார அணிகலன்கள், ஹான்ட்பாக்கள் மற்றும் பாதணிகள் போன்றனவும் காணப்படுகின்றன. 

இவை வெவ்வேறு வர்ணங்களில் காணப்படுவதுடன், வெவ்வேறு நபர்களின் விருப்பங்களையும் தெரிவுகளையும் நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. சகல காட்சியறைகளிலும் உயர் தரம் வாய்ந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு வர்த்தக நாமங்களை காட்சிப்படுத்தியுள்ளதுடன், தமது சுய வர்த்தக நாமங்களான Givo, Posh, Hush, Jobbs, Bigg Boss, Rock Star மற்றும் Bug Junior ஆகியவற்றை கொண்டுள்ளது.

Triumph International Lanka தமது விநியோகஸ்த்தர் வலையமைப்பை மேம்படுத்தியுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து வருகிறது. இதன் மூலமாக இலங்கையில் புத்தாக்கமான மற்றும் நவீன அலங்காரங்களில் அமைந்த உள்ளாடைகளை விநியோகித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் “பேரார்வம் நிறைந்த வர்த்தகநாமம்” எனும் நிலையை எய்தியுள்ளது. 

இதற்காக பெருமளவு வர்த்தக நாமம், புத்தாக்கம் மற்றும் வர்ணமயமான அலங்காரத் தெரிவுகளை கொண்டுள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட விநியோக நாளிகை கொள்கையை மேம்படுத்திய வண்ணமுள்ளது.

Fashion Bug இன் பணிப்பாளர் ஷபீர் சுபியன் கருத்து தெரிவிக்கையில்,

 “தொடர்ச்சியான Triumph இன் பிரதான பங்காளராக மூன்று ஆண்டுகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களுடன் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், விநியோகஸ்த்தர்களுடனும் சிறந்த முறையில் பேணி வருகிறோம். அத்துடன் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்று சேவைகளை வழங்கி வருகிறோம். எதிர்காலத்தில் Triumph உடனான எமது உறவை மேலும் வலுப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

1994ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக 4 பங்காளர்களுடன் ஆரம்பித்திருந்த Fashion Bug, ஆரம்பத்தில் 15 ஊழியர்களை மட்டுமே கொண்டிருந்தது. இன்று 16 காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன், இவற்றில் 1250க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் முன்னணி ஆடை அலங்கார விற்பனையகமாக திகழும் இந்த நிறுவனம், “வாழ்க்கைக்கு புது வடிவம்” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.