தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைவாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான ஒருவாரம் தகவல் வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்ம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் குறித்த காலப்பகுதியில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை பயன்படுத்தும் முறை குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

“கிராமத்திற்கு தகவல் உரிமை” என்ற தலைப்பில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் குறித்து நடமாடும் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இதேவேளை, குறித்த நடமாடும் சேவை மூலம் மாணவர்களுக்கு சட்டம் தொடர்பில் தெளிவை ஏற்படுத்துவதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ள நிலையில், அமைச்சர் மங்கள சமரவீர இதற்காக சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி அனுஷ்டிப்பதற்கு யுனெஸ்கோவில் கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

அந்தவகையில் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் முதலாவது தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் தகதி  அனுஷ்டிக்கப்பட்டது.