ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை  விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

றம்பாவ பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பண்டுகாபயபுர கிராமத்தில் அமைக்கப்பட்ட முதியோர் சங்க மண்டபத்தினை திறந்த வைத்துவிட்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு இவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஒன்று சேர்ந்திருப்பவர்கள் எதிர்வரும் தேர்தல்களில் நிச்சயமாக தோல்வியடைவோம் என்பதை அறிந்த ஒரு சிலரே உண்ணிகள் போல் மஹிந்த ராஜபக் ஷவின் உடலில் ஒட்டிக் கொண்டு அவரது இரத்தத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கின்றனர். 

அரசு முன்னெடுக்கும் அனைத்து பயன்மிக்க திட்டங்களையும் எதிர்க்கும் குழுவாக இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அழைத்துக் கொள்ளும் பிரிவொன்று முயற்சித்து வருகின்றது. அப்பாவி விவசாயிகளுக்கு பிழையான தகவல்களை வழங்கி அவர்களை வீதிக்கு இறக்கிவிட்டு வேடிக்கை பார்க்கும் குழுவாக அது மாறியுள்ளது.

இன்று தமது வேண்டுகோள்களைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் உள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் ஆர்ப்பாட்டம் செய்த குழுக்களின் தலைவர்கள் வெள்ளை வேனில் கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். சிலரின் கை, கால்கள் முடமாக்கப்பட்டன. இவ்வாறான யுகத்துக்கு நாம் முடிவு கட்டியுள்ளோம்.