செ.லோகேஸ்வரன்

ரஷ்யாவும், சீனாவும் இணைந்து நடத்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மிகப்பெரிய போர் பயிற்சியை மேற்கொள்கின்றது. குறித்த பயிற்சியில் மூன்று இலட்சம் இராணுவத்தினர், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், 1000 போர் விமானங்கள் மற்றும் 80 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. 

ரஷ்யா ஒவ்வொரு வருடமும் போர் பயிற்சியை மேற்கொள்வது வழக்கம் அதன்படி இவ்வருடமும் மிகப்பிரமாண்டமான அளவில் உலக வராலாற்றில் இல்லாத அளவுக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இந்த போர் பயிற்சி நேற்று ஆரம்பமாகிய நிலையில் குறித்த பயிற்சியில் சீனா மற்றும் மங்கோலிய இராணுவ படைகளும் மிகச்சிறிய அளவில் கலந்துகொள்கின்றன. 

சுமார் ஒரு வாரம் நடைபெறவுள்ள இந்த பயிற்சி வோஸ்டாக் 2018 பயிற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்தோடு தற்போது ரஷ்யாவில் நடைபெறும் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங் அங்கு சென்றுள்ளார். 

பொருளாதார மாநாட்டை தொடங்கி வைத்த பின் ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஆகியோர் இந்த போர் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளார்கள்.

உக்ரைன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமீபகாலமாக ராஜதந்திர நிலை சீர்குலைந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் மிகப்பிரமாண்டமான முறையில் சீனா மற்றும் மொங்கோலியா படைகளை இணைத்து ரஷ்யா போர் பயிற்சி மேற்கொள்வது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த செப்டம்பர்  முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை ரஷ்யாவானது சிரிய எல்லையில் மிக நீண்டதொரு போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தது. 

இதில் 24 பாரிய போர்க் கப்பல்களும், 2 நீர்முழ்கி கப்பல்களும் 24 போர் விமானங்களும் இணைந்து குறித்த போர் பயிற்சி இடம்பெற்றது.

குறித்த பயிற்சியானது எதிர்வரும் காலங்களில் நிகழக்கூடிய முறுகலுக்கான ஒரு முன்னோட்டமாக உலக அரசியல் வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

ஒரு சில சர்வதேச ஊடகங்கள் மற்றுமொரு உலகப்போர் ஏற்படும் சூழல் உருவானால் இந்த பயிற்சி பயன்படும், இல்லாவிட்டால் அடுத்தடுத்து நடைபெறும் சிறு மோதல்களுக்கு பயன்படும் என நினைப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

எங்களது எதிரி அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும்தான். இந்த பயிற்சி எச்சரிக்கையோ அல்லது தகவலோ அல்ல. மிகப்பெரிய போருக்கு தயாராகும் நடவடிக்கை தான். நேட்டோ நாடுகள் இதனால் பயப்பட வேண்டாம். இந்த பயிற்சி அந்த நாடுகளை விட மிகப்பெரிய தொலைவில் நடக்கிறது’’ என ரஷ்ய இராணுவ ஆய்வாளர் பாவெல் பேகனர் என்பவர் கருத்து தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் வருடாந்த போர் பயிற்சி 2014 இல் நடந்த போது ஒரு இலட்சத்து 55 ஆயிரம் இராணுவத்தினர் பங்கேற்றார்கள். 2017 ஆம் ஆண்டு 12,700 வீரர்கள் மட்டுமே பங்கேற்றதாக ரஷ்யா கூறியது. ஆனால் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் எண்ணிக்கை அதிகம் என விமர்சித்திருந்தன. 

இந்நிலையில் இன்று தொடங்கும் போர் பயிற்சியில் சீன தரப்பில் 3,200 வீரர்களும், மொங்கோலியாவிலிருந்து சிறிய எண்ணிக்கையிலான வீரர்களும்  பங்கேற்க உள்ளனர்.

இந்த போர் பயிற்சியை தவிர்த்து அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் கூட்டுக் கடற்படை இராணுவப் பயிற்சியில் சீனா உட்பட 27 நாடுகள் பங்கேற்றுள்ளன. எதிர்வரும் 15 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள குறித்த பயிற்சியில், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள போர்ட் டார்வினில் 27 நாடுகள் பங்கேற்ற கடற்படை தொடர்பான இராணுவப் பயிற்சியில் சீனா முதல் முறையாகப் பங்கேற்றுள்ளது.

குறித்த பயிற்சியிற்கு வெவ்வேறு நாடுகளிலிருந்து 3,000 கடற்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளதோடு, 23 கப்பல்கள் இந்தப் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளன.

சீனா - அமெரிக்கா இடையே வணிகப்போர் வலுத்து வரும் நிலையில் அவுஸ்திரேலியாவுடனான இந்தக் கூட்டுப் கடற்படைப் பயிற்சியில் சீனா கலந்து கொண்டிருப்பது உலக நாடுகளிடையே மற்றொரு அதிர்வை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு வருகின்றன. 

இச்சூழலில் மறுமுனையில் பிரதிபலிப்பாக இம்மாதம் 3ஆம் திகதி முதல் 2,200 உக்ரைனியன், அமெரிக்கர்கள் மற்றும் 14 நேட்டோ நாட்டு வீரர்கள் அடங்கலாக மேற்கு உக்ரைனின் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனத்திற் கொள்ளவேண்டிய விடயமாகவுள்ளது.