(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிர்க்கட்சி கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் நடத்திய மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரசாங்க தரப்பினால் விஷம் கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டு மக்களை கொன்றொழிப்பதற்கு முயற்சித்தமை தொடர்பில் அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என  கூட்டு எதிரணியின் உறுப்பினர்  டலஸ் அளகப் பெரும தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற ஆகாரம் வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி கடந்த ஐந்தாம் திகதி கொழும்பில் நடத்திய மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு அரசாங்க தரப்பினரால்  விஷம் கலந்த பாலை வழங்கியுள்ளனர்.  

எனவே இலங்கை வரலாற்றில் அரசாங்கத்தினால் மக்களுக்கு விஷம் கலந்த ஆகாரம் வழங்கிய சம்பவம் கடந்த ஐந்தாம் திகதியே பதிவாகியுள்ளது. 

அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட பால் பெகட் சிலவற்றை எனது சாரதியும் பெற்று வந்தார். அதில் ஒன்றை நானும் அருந்தினேன். அதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.  ஆகவே இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்டு மக்களை கொன்றொழிப்பதற்கு முயற்சித்தமை தொடர்பில் அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்றார்.