(எம்.சி.நஜிமுதீன்)

எரிபொருள் சூத்திரத்திற்கு சமாந்தரமாக அரச மற்றும் தனியார் துறைகளுக்கான சம்பள அதிகரிப்பு சூத்திரம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும். அத்துடன் சமுர்தி உள்ளடங்கலாக ஏனைய கொடுப்பனவுகளுக்கும் சூத்திரம் அறிமுகப்படுத்த வேண்டும். அல்லாது போனால் மக்களின் பொருளாதார நிலை சீர்குலைவதைத் தவிர்க்க முடியாதென கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அவ்வெதிர்க்கட்சியின் இணை தேசிய அமைப்பாளர் டலஸ் அளகப் பெரும அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மூன்று தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் அதிகரிப்பினால் சகல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பது வழமை. மேலும் எரிபொருள் விலைச் சூத்திரம் பற்றி பொதுமக்களுக்குத் தெரியாது. அதேபோல் பெற்றோலிய தொழிற்சங்க பிரதிநிதிகள்,பெற்றோலியத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் அது குறித்து தெரியாது. 

தகவல் அறியும் சடத்திற்தினூடாக எரிபொருள் சூத்திரம் தொடர்பில் கோரியபோதும் அத்தகவலை வழங்க முடியாதென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மூன்று தடவை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதிலும் அச்சூத்திரம் பற்றி அரசாங்கம் தெழிவுபடுத்தாமை மக்களை ஏமாற்றும் செயற்பாடாகவே கருத வேண்டியுள்ளது என்றார்.