19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்த்த மூவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் இடம்பெறவுள்ள கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றும் 19 மற்றும் 25 வயதிற்கிடைப்பட்டோருக்கான இலங்கை அணியிலேயே குறித்த மூவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் 25 வயதிற்குட்பட்டோருக்கான அணியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான  ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் மலேசியாவில் இடம்பெறவுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் இரு இருபதுக்கு - 20 போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.

மலேசியாவில் 9 நாட்கள் இடம்பெறவுள்ள இக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இம் மூவரும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் இலங்கை தேசிய அணியில் இடம்கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும் என்பதில் சந்தேகமில்லை.