தனது மகனை தூக்கிலிடுவதை தான் எதிர்க்கப்போவதில்லை என நீதிமன்றுக்கு கடிதம் ஒன்றை எழுத்தி வைத்துவிட்டு, தாய் ஒருவர் பிக்குனியாக துறவறம் பூண்ட சம்பவம் குருநாகல் கிரிபாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆர்.கே.குசுமாவதி என்ற இந்த பெண்ணே, கிரியால, பளுகொல்ல குண்டகல பிக்குகள் ஆராண்யத்தில் ராஜாங்கனயே தம்மதின்னா என்ற பெயரில் நேற்று துறவறம் பூண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கிரிபாவ பொலிஸ் பிரிவின் சாலிய அசோகபுல யாய 2 என்ற பகுதியில் வசித்து வந்த 17 வயதான மதுஷானி என்ற மாணவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மகனின் செயலை கண்டு மனமுடைந்த தாய் நீதிமன்றுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு துறவறம் பூண்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

மதுஷானியின் துயரமான மரணமே தன்னை சாதாரண வாழ்க்கையை கைவிட்டு துறவறம் பூண காரணமாக அமைந்தது.

இந்த மரணம் தனக்கு வாழ்க்கை தொடர்பில் பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது.

துன்ப துயரங்கள் நிறைந்த இந்த வாழ்வில் இருந்து விடுபடும் திடசங்கற்பத்துடன் மீதமுள்ள காலத்தை தியானத்தில் கழிக்க உள்ளேன்.

மாணவியை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுவதை தான் எதிர்க்கவில்லை.

துறவறம் பூண தனக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த மதுஷானியின் வீட்டுக்குச் சென்று, அந்த மகளுக்காக பிரார்த்தனை செய்து, தர்ம உபதேசம் செய்வதே தனது பெரிய எதிர்பார்ப்பாகும் என அக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.