(இரோஷா வேலு) 

தொலைக்காட்சி ஊடகங்களுக்கு முன் சென்று பொய்யுரைக்காமல் உண்மையில் பல்கலைக்கழகங்களுக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை உடனடியாக பெற்றுத்தாருங்கள். இல்லையேல் பாராளுமன்றம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை ஒரே நாளில் முற்றுகையிடுவோம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்தார். 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தினுள் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்திட்ட குறைப்பாடுகள் அடங்கிய கோரிக்கை மனுவை உயர் கல்வி அமைச்சிடம் வழங்குவதற்காக வருகை தந்திருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் மனுவை எவரிடமும் கையளிக்க முடியாமல் போனமையினால் அமைச்சகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்திருந்தனர். 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களது போராட்ட பேரணியானது கொம்பெனித்தொரு வழியாக உயர்கல்வி அமைச்சகத்திற்கு வந்து சேர்ந்தது. இதன்போது லோட்டஸ் சுற்றுவட்டாரம் முற்றாக வீதி மறியல் இடப்பட்டிருந்ததுடன் நீர்த்தாரை பிரயோகிக்கும் வாகனங்களும் கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 

இவர்களை தாண்டி உயர் பல்கலைக்கழக அமைச்சகத்திற்கு மாணவர்கள் வருகை தந்திருந்த வேளையில் அமைச்சகத்திலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் உயரதிகாரிகள் எவரும் இல்லையென கோரிக்கை மனுவை கையளிக்க சந்தர்ப்பம் வழங்கபடவில்லை. 

இதன்போது ஆவேசமடைந்த மாணவர்கள் அமைச்சகத்தின் நுழைவாயிலை முற்றுகையிட்டு அதன்முன்பாக வீதியை மறைத்து அமர்ந்ததுடன், ஒலியெழுப்ப கூடாது என சமிஞ்சை பொறுத்தப்பட்டிருந்த இடத்திலேயே ஒலிபெருக்கிகளை வைத்து கோஷமெழுப்ப ஆரம்பித்தனர். 

இதன் போதே அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.