கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி  பலரிடம் இலட்சக்கணக்கான பணத்தை மோசடி செய்த பொல்கொல்ல பிரதேச பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இவ்வாறு குறித்த பெண்ணிடம் பணம் பறிகொடுத்தவர்கள் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யும் படியும் பொலிசார்  மக்களிடம் கேட்டுக்கெண்டுள்ளனர்.

நாட்டில் பல பாகங்களிலுமுள்ள 27  நபர்களிடம்  16 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மேற்படி நபரும் அவருடன் இணைந்த கும்பலும் சேர்ந்தே மேற்படி மோசடியைச் செய்துள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கட்டுகாஸ்தோடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

கண்டி ,கட்டுகஸ்தோட்டை ,மாத்தளை ,உக்குவலை, தெல்தெனிய மற்றும்  யக்கள ஆகிய பிரதேசங்களில்  வசிக்கும் 27 நபர்களிடம் இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. கட்டார் நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி ஆண்கள்  மற்றும் பெண்களிடம் இருந்தும் இவ்வாறு பணம் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடம் பெற்ற பணம் பிரதான சந்தேக நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கைதுசெய்யப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன் அச் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

அதேநேரம்  இக் கும்பலிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் இருப்பின் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாரும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பொல்கொல்லை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணை கண்டி நீதவான் முன் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.