(இரோஷா வேலு)

இருவேறு நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேகநபரொருவர் மினுவாங்கொடை வடினபஹ பிரதேசத்தில் வைத்து புராதண பொருளென சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் பாலியாகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

 ஆதிகம சிலாபத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64 இலக்க, வடினபஹ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து 15 கிலோ 440 கிராம் நிறையுடைய 10 அடி உயரம் 10 அடி அகலத்துடன் கூடிய புராதண பொருளென சந்தேகிக்கப்படும் புத்தர் சிலையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 இவரை கைதுசெய்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் குறித்த நபர் தொடர்பில் இத்தாலியில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி  நிதி மோசடி செய்தமை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு 2014.07.11 ஆம் திகதியிலிருந்து இன்றுவரையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. 

மேலும் கடுவெல நீதவான் நீதிமன்றினால் 330,000 பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்ளையிட்ட சென்ற சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸாரால் தொடரப்பட்ட வழக்குக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவராவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த நபரை  மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.