இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான அண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வேகப் பந்து வீச்சாளர் என்ற சாதனையை பதித்துள்ளார்.

முன்னதாக அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மெக்ராத் 124 டெஸ்ட் போட்டிகளில் 563 விக்கெட்டுக்களை கைப்பற்றி நான்காவது இடத்தில் இருந்தார்.

இந் நிலையில் அண்டர்சன் 561 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஐந்தாவது இடத்திலிருந்தபோதும் நேற்றைய தினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது இன்னிங்ஸில் அண்டர்சன் தவான், புஜார மற்றும் ஷமி ஆகியோரை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 564 விக்கெட்டுக்களை கைப்பற்றி மெக்ராத்தை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்திற்கு முன்னேறினார்.

அத்துடன் அண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையையும் நேற்றைய தினம் படைத்துள்ளார்.

பந்து வீச்சாளர்களை பொருத்தவரையில் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில், இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் அனில் கும்ளே 619 விக்கெட்டுக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.