ஆறு கோடி ரூபா பெறுமதியான  39 கிலோ கிராம் கடல் குதிரை, கடல் அட்டைகளுடன் சீனப் பிரஜை  ஒருவரை நேற்று மாலை கைது  செய்ததாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சீன நாட்டவர்  நீர்கொழும்பு  கிம்புலாபிட்டிய பிரதேசத்தில்  வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, கடல் குதிரை மற்றும் கடல் அட்டைகளை சேகரித்து சட்ட விரோதமான முறையில் சீனாவுக்கு ஏற்றமதி செய்து வந்துள்ளார்.

 நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு,  சந்தேக நபரிடமிருந்து 5.3 கிலோ கிராம் கடல் குதிரைகள், 33 கிலோ கிராம் 303 கிராம் நிறை கொண்ட கடல் அட்டை ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக  நபர் கடல் குதிரை, கடல் அட்டைகளை இலத்திரனியல் பிளண்டர்களில் அரைத்து தூளாக்கி இலங்கையில் பிரசித்தமான தேயிலை கம்பனி ஒன்றின் பக்கற்றுக்களில் அதனை இட்டு தேயிலையை சீனாவுக்கு அனுப்புவது போன்று கடத்தலை மேற்கொண்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து இலத்திரனியல் பிளன்டர் ஒன்று, பொலித்தீன் சீலர் ஒன்று என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடல் குதிரை, கடல் அட்டைகள் எமது நாட்டில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களாகும்.  

கடல் அட்டை ஒரு கிலோ கிராம் 15 இலட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வருகிறது.

சந்தேக நபரை இன்று மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்