வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது உபுல்தெனிய பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த மூவரும் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குழாய்க்கிணறு தோண்டும் பணியில் ஈடுபடும் இளைஞர்குழு தம்புள்ளை பகுதியில் பணியை முடித்துக்கொண்டு மற்றுமொரு குழாய்க்கிணறு பணிக்காக காட்டகஸ்திகிரிய நோக்கி நேற்று இரவு குழாய் கிணறு அடிக்கும் இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு பயணத்தனர்.

இதன்போது உபுல்தெனிய எனும் கிராமத்தை நெருங்கிய பொழுது இவர்களின் எதிரே பயணித்த காரில் இருந்த இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் குறித்த இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை கலமிதுலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதுடன், மூவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் தமது வாகனத்தில் இருந்த 7 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் முறைப்பாடு செய்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.