(நா.தனுஜா)

நாட்டின் வட பகுதியில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான அடிப்படையிலான பணிக்கு உதவும் வகையில் ஜப்பான் அரசாங்கம் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியினை வழங்கியுள்ளது.

கண்ணிவெடி அகற்றல் தொடர்பில் சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் கண்ணிவெடிகள் ஆலோசனைக்குழு மற்றும் உள்நாட்டில் செயற்படும் ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக்குழு ஆகிய அமைப்புக்களுக்கு கண்ணிவெடி அகற்றுவதற்கென மேற்படி நிதியினை ஜப்பான் அரசாங்கம் வழங்குகின்றது. 

கண்ணிவெடி அகற்றுவதற்கான நிதியுதவியினை வழங்குவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிசி சுகுமாவுடன், ஸ்கவிடா மனிதாபிமான உதவிகள் மற்றும் கண்ணிவெடிகள் ஆலோசனைக்குழுவின்  செயற்றிட்ட முகாமையாளர் வி.எஸ்.எம்.ஜயவர்தன மற்றும் கண்ணிவெடி ஆலோசனைக்குழுவின் தொழில்நுட்ப செயற்பாட்டு முகாமையாளர் ரோவன் பெர்ணான்டஸ் ஆகியோருக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது.