(எம்.ஆர்.எம்.வஸீம்)

இந்தியாவுக்கு தேவையான முறையில் அரசாங்கம் செயற்படக்கூடாது. ஜனாதிபதி இது தொடர்பில் கவனம்செலுத்தவேண்டும். அத்துடன் சுப்பிரமணியன் சுவாமியே மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு தரகர்வேலை பார்த்து வருகின்றார் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் அரசாங்கம் முறையான வழிமுறையொன்றை பின்பற்றவேண்டும். நாட்டின் அனைத்து வளங்களையும் வெளிநாடுகளுக்கு வழங்கினால் எதிர்காலத்தில் எங்களுக்கென்று எதுவும் இருக்காது.  

 இந்தியா எமது நாட்டின் முக்கிய வளங்களை குத்தகைக்கு வழங்குமாறு கோரி வருகின்றது. என்றாலும் அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் இந்திய பாரத ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராக சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் இலங்கைக்கு வந்து மஹிந்த ராஜபக்ஷ்வுடன் கலந்துரையாடிவிட்டு இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

அவரின் அழைப்பின் பேரிலே மஹிந்த ராஜபக்ஷ் தற்போது இந்தியாவுக்கு சென்றுள்ளார். அவர் வந்ததன் பின்னர் பிரதமர் இந்தியாவுக்கு செல்வார். 

இந்தியாவுக்கும் மஹிந்த ராஜபக்ஷ்வுக்குமிடையில் தரகர் வேலையையே சுப்பிரமணியன் சுவாமி மேற்கொண்டு வருகின்றார். 

அதனால் இந்தியாவின் தேவைக்கேற்ற வகையில் நாட்டின் முக்கிய வளங்களை வழங்க அரசாங்கம் முற்படக்கூடாது என்றார்.