முந்தல் பொலிஸார் நேற்று மேற்கொண்ட திடீர்  சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 44 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்தனர். நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் இறுதி நேரத்தில் புத்தளம் சிலாபம் பிரதான வீதியில் வீதிச் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் பல்வேறு வாகனக் குற்றங்களுடன் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொஹரிய, ஜயசிறிகம, பாலச்சோலை, முந்தல், மரியன்சேனை, தாராவில்லு, வேலுசுமனபுர போன்ற பிரதேசங்களில்  கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் 69 கசிப்பு போத்தல்களுடனும், பத்தாயம் பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர்  கஞ்சாவுடனும்,  பத்தாயம் பிரதேசத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

 மேலும் மதுரங்குளி பிரதேசத்தில் இரவு நேரத்தில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி மண் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை பெக்கோ இயந்திரத்துடனும், முக்குத்தொடுவா பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற ஒருவரை மண் ஏற்றப்பட்ட டிப்பர் லெறியுடனும், மதுரங்குளி, வேலாசிய, கந்ததொடுவா, பரலங்கட்டு போன்ற பிரதேசங்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  ஆறு பேரையும் இதன் போது கைது செய்துள்ள பொலிஸார் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட மூவரையும் கைது செய்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முந்தல் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், நான்கு உப பொலிஸ் பரிசோதகர்கள், ஆறு பொலிஸ் சார்ஜன்கள், 29 பொலிஸ் கான்ஸ்டபில்கள் மற்றும் 3 பொலிஸ் சாரதிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.