கொரிய வேலைவாய்ப்பைக் காட்டி,  பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகம் தெரிவித்துள்ளது.    

தென் கொரியாவுக்கு  ஆட்களை இணைத்துக்  கொள்ளும் பணியை,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகம் மேற்கொண்டு வருகிறது.

இதனால்,  கொரியாவில் வேலைவாய்ப்புப்  பெற்றுத்தருவதாகத் தெரிவித்து மோசடிகளை மேற்கொள்வோரிடம் பணத்தை வழங்க வேண்டாம் என்றும்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகம் பொது மக்களிடம் கேட்டுள்ளது.

கொரியாவில்  தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்தைப்  பெற்றுத்தருவதாகத் தெரிவித்து, பணத்தைச்  சேகரிக்கும் மோசடிக்காரர்கள் தொடர்பில்,  தொலைத் தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ,  பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கவனத்திற்குக்  கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகவைத்து,  சட்டத்தை கடுமையாக நடைமுறைப்  படுத்துமாறும்,  பணியகத்துக்கு இவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தென் கொரியாவில் தொழில்வாய்ப்புக்காக இணைத்துக்  கொள்ளும் செயற்பாடுகள்,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகத்தினால், கொரிய மனிதவள திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த விடயத்தில் அரச ரீதியிலோ அல்லது ஏனைய வெளி நபர்களினாலோ எந்தவித  அழுத்தங்களையும் மேற்கொள்ள முடியாது.

கொரியாவில் வேலைவாய்ப்புத்  தேடுபவர்களுக்கு, கொரிய மொழியைப்  பயிற்றுவிப்பதற்காக எந்த ஒரு நிறுவனத்தையோ அல்லது தனி நபரையோ பெயரிடவில்லை என்றும்,  எவருக்கும் எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை என்றும்,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.