ஆர்ப்பாட்டங்கள்  நடத்தி  ஜனாதிபதி  பிரதமரை நீக்க முடியாது.   அவைகளை  தேர்தலொன்றின்  மூலம்தான் செய்ய முடியும். அதுவரைக்கும்  பொறுமையாக இருக்கும்படி பொது எதிரணியினருக்கு சொல்லுவதற்கு  விரும்புகின்றேன் என சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.

பொது  எதிரணியினரின்  ஜனபலய  மக்கள்  பேரணி  தோல்வியடைந்துள்ளதால் அதனை  மறைப்பதற்காகவேண்டி  பால்  பக்கற்றுக்கள்  வழங்கினார்கள் என்ற கதையினை முன்வைத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.  

அநுராதபுரத்தில்  நடைபெற்ற   நிகழ்வொன்றில்   கலந்துகொண்டு  உரை  நிகழ்தும் போதே   அமைச்சர்  இவ்வாறு  தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்து  உரை நிகழ்துகையில்,

மக்கள்  பேரணியினை  கொழும்புக்கு  கொண்டுவந்து முக்கியமான  இடங்களையும்  ஜனாதிபதி  மாளிகை  மற்றும்  பிரதமர்  அலுவலகம் என்பவற்றை முற்றுகையிட்டு  நல்லாட்சி  அரசாங்கத்தினை  வீட்டுக்கு  அனுப்புவோம்  என்று  மக்களுக்கு பெரும் பிரச்சாரத்தினை  மேற்கொண்டனர்.

எதிர்பார்த்த  விடயங்கள்  ஒன்றும்   கைகூடவில்லை.  அவைகளை  மறைப்பதற்காக வேண்டி  நாட்டு  மக்களுக்கு  ஏதாவது  ஒன்றை சொல்லவேண்டுமே அதற்காக வேண்டித்தான்   ஊடகங்கள்  முன்னிலையில்  வந்து   விசம்  கலந்த   பாற்பக்கற்றுக்களை   வழங்கினார்கள் என பொய்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். பால் பக்கற்றுகள் வழங்குவதற்கு எங்களுக்கு  எந்த  தேவையும் இல்லை.

பசில் ராஜபக்ஷ  அவர்களும்  அவருடைய   குழுக்களும்   பேரணியில்  கலந்துகொள்ளவில்லை  அதனால்  அவர்களுடய   மக்கள்  பேரணி  தோல்வியடைந்துள்ளது  அது  அவர்களுக்கு  நன்றாக விளங்கியுள்ளது.

மொட்டு  கட்சியினர்   பாராளுமன்றத்தில்   எதிர்க்கட்சி  தலைவர்  பதவியை   தங்களுக்கு  வழங்க  வேண்டுமெனவும்   பாராளுமன்ற  குழுத்தலைவர்   பதவி  பொது  எதிரணிக்கு   தரவேண்டும்   என  முயற்சித்தனர்.

 அதேபோன்று பிரதமரை பதவியில்  இருந்து  விரட்டவேண்டும்  ஜனாதிபதிக்கு  பல  குமந்திரங்களையும்   செய்தனர்  அது  ஒன்றுமே  பலனளிக்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள்  நடத்தி   ஜனாதிபதி  பிரதமரை   நீக்க  முடியாது   அவற்றை தேர்தலொன்றின்  மூலம்தான்   செய்ய  முடியும்.

அதுவரைக்கும்  பொறுமையாக இருக்கும்படி பொது  எதிரணியினருக்கு   சொல்லுவதற்கு  விரும்புகின்றேன்.

தேர்தலொன்றின் பின்னர்  என்ன  நடக்கின்றது  என  பார்ப்போம். அவர்களுக்கு  பூரண  சுதந்திரம்  வழங்கப்பட்டிருந்தது  ஆர்ப்பாட்டங்கள்  நடத்துவதற்கு  அவர்களை தாக்குவதற்கோ  தடுப்பதற்கோ  அரசுக்கு  எந்த  தேவையும்  இல்லையென  அமைச்சர்  மேலும்  தெரிவித்தார்.