பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்காக ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் கைபேசிகள்  உள்ளிட்டவைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என பிரதமர் இம்ரான்கான் தலைமையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுள்ள நிலையில் பாகிஸ்தானின் நிதிநிலை குறித்தும் பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது குறித்தும் பொருளாதார ஆலோசகர்கள் கூட்டம் இடம்பெற்றது.

இம்ரான் கான் தலைமையில் நிதி அமைச்சர் ஆசாத் உமர் மற்றும் 15 நிதி ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதால் அதிக அளவில் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.

இதனால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார சிக்கல் உருவாகியுள்ளது. அதை சரி செய்ய சர்வதேச நிதி ஆணையத்திடம் இருந்து நிதி உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை பிரதமர் இம்ரான்கான் விரும்பவில்லை. நாடு யாரையும் சார்ந்து இருக்க கூடாது என அவரும், கட்சி நிர்வாகிகளும் தெரிவித்தனர்.

எனவே, சர்வதேச நிதி ஆணையத்தின் உதவியை நாடாமல் பொருளாதார நெருக்கடியை கட்டுவடுத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி ஆடம்பர கார்கள், ஸ்மார்ட் கைபேசிகள் பாலாடைக்கட்டி மற்றும் பழ வகைகளை ஒரு ஆண்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

தற்போதுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானில் ரூ.66 ஆயிரம் கோடி பற்றாக்குறை உள்ளது. ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதன் மூலம் ரூ.33 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சரிகட்ட முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.