இங்கிலாந்துக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான நிதியை தனிப்பட்ட ஒருவரின் கணக்குக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந் நிதி மோசடி முயற்சி தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒளிபரப்பு நிறுவனத்தினால் வழங்கப்படவிருந்த 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையே இப்படி தனிப்பட்ட கணக்குக்கு மாற்ற முயற்சிகள் நடந்துள்ளன. ஆனாலும் இந்த நிதிமோசடி முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் இந் நபர் யார் என்பது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிவிக்கவில்லை.
இச் சம்பவம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் ஆலோசனைக்கமைய நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினுடைய கணக்குப் பிரிவு முடக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.