(எம்.ஆர்.எம்.வஸீம்)

மக்களுக்கு அசாதாரணம் நிலவும்  சுங்க திணைக்களத்தில் மாபியாவை நிறுத்துவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முன்வரவேண்டும். துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களை 24மணி நேரத்துக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுக்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மஹிந்த ராஜபக்ஷ ரெஜிமன்டுக்கு அடுத்தபடியாக உள்ள மிகப்பெரிய ரெஜிமன்ட் ஆக இன்று சுங்க திணைக்களம் இருக்கின்றது. யாரும் இதில் கைவைப்பதில்லை. யாருடைய கட்டளையையும் இவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நிதி அமைச்சர் ஒன்றைச் சொல்வார். ஆனால் சுங்க திணைக்களத்தில் அது அமுல் படுத்தப்படுவதில்லை.

இன்று நாட்டுக்கு கூடுதலான அன்னியச் செலாவணி   வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களாலே பெற்றுக்கொடுக்கப்படுகின்றது. அவர்கள் வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பொருட்களை இலகுவான முறையில் சுங்க திணைக்களத்தில் இருந்து வெளியில் கொண்டுவர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருட்கள் வரும் கொள்கலன்களை மாதக்கணக்கில் வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதன்காரணமாக பொருட்களுக்கு நட்டயீடு கொடுக்கவேண்டிய நிலைமையும் ஏற்படுகின்றது. எனவே துறைமுகத்துக்கு வரும் கொள்கலன்களை 24மணி நேரத்துக்குள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சர் எடுக்கவேண்டும்.