பதுளை பசறை கல்விவலய கோனாகல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 17வயதுடைய நந்தகுமார் எனும் மாணவன் நேற்று   கரவனல்லை பகுதியிலுள்ள களனி ஆற்றில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கரப்பந்தாட்ட போட்டி ருவன்வெல்லயில் நேற்று இடம்பெற்றது. 

அப்போட்டியில் பங்குகொள்வதற்காக அப்பாடசாலையை சேர்ந்த 28 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் வருகைத்தந்த போது இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இப்போட்டியில் பங்குபெறும் மாணவர்களை கரவனெல்ல சிங்கள பாடசாலையில் தங்கவைத்துள்ளனர்.

இதன்போது போட்டி நிறைவடைந்து பதுளைக்கு திரும்புவதற்காக மாணவர்களும் ஆசிரியர்களும் தயாராகிக்கொண்டிருந்தபொழுது நேற்று மாலை 4 மணியளவில் கோனாகல தமிழ் மகா வித்தியாலய மாணவர்களில் 04 பேர் ஆசிரியர்களுக்கு தெரியாமல் களனி ஆற்றில் நீராட சென்றுள்ளனர்.

இதன்போதே நீராடிய மாணவர்களில் நந்தகுமார் என்ற மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவன் கரவனல்லை களனி ஆற்று பாலத்திற்கு அடியில் உள்ள நீர் சுழியில் அகப்பட்டிருக்ககூடும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

நேற்று மாலையிலிருந்து ருவன்வெல்ல பொலிசார் நீரில் மூழ்கிய மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 நேற்று மாலைவரை மாணவனை கண்டறியமுடியவில்லை இன்று காலை முதல் சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுதலில் ஈடுப்பட்டு வருகின்றனர் இருப்பினும் இதுவரை மாணவன் கண்டறியபடவில்லை.

சம்பவம் தொடர்பில் ருவென்வெல்ல பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையையும் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.