சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக எச்சரிக்க டிரம்ப் நிர்வாகம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டால் அந்த நீதிபதிகளுக்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுக்கவுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் இது குறித்த அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

ஹேக்கின் சட்டவிரோத நீதிமன்றத்திலிருந்து அமெரிக்கா தனது பிரஜைகளையும் தனது சகாக்களையும் பாதுகாக்கும் என அவர்  தெரிவிக்கவுள்ளார்.

அமெரிக்கா தனது சகாவான இஸ்ரேலுடன் எப்போதும் இணைந்திருக்கும் எனவும் குறிப்பிடவுள்ள போல்டன் ஆப்கானில் அமெரிக்க படையினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பித்தால் டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்க்கும் எனவும் தெரிவிக்கவுள்ளார்.

அமெரிக்க படைவீரர்களிற்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் ஏனைய நீதித்துறையினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதி;க்கும் யோசனைகளையும் அவர் முன்வைக்கவுள்ளார்.

இஸ்ரேலிற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் சர்வதேச விசாரணையை கோருவதால் வோசிங்டனில் உள்ள  பாலஸ்தீனிய அலுவலகத்தை மூடும் அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார்.