இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையை சேர்ந்த சிரேஸ்ட அதிகாரியொருவர் 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முயன்றமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான ஒலிபரப்பு உரிமைகள் தொடர்பான பணத்தை குறிப்பிட்ட அதிகாரி வெளிநாடொன்றிலுள்ள வங்கிக்கணக்கொன்றிற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிடம் முறையிட்டுள்ளனர்.

சிரேஸ்ட அதிகாரியொருவரின் மோசடி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டமைச்சர் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி ஆஸ்லி டி சில்வா நிதிக்குற்றங்கள்  தொடர்பான பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஊடக உரிமை தொடர்பான நிதியில்  இடம்பெறவிருந்த மோசடியை தடுத்து நிறுத்தியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

போலியான நடவடிக்கைகள் மூலம் மோசடி நடவடிக்கை இடம்பெறுவதற்கு முன்னர் அதனை கண்டுபிடித்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.