ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க இரட்டை வேடம் போடுவதாக தமிழக பா ஜ க தலைவர் தமிழிசை சௌந்தரர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமானநிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

‘பெற்றோல் டீஸல் விலை இந்தளவிற்கு உயர்ந்ததற்கு தொலை நோக்கு பார்வையுடன் எண்ணெய் நிறுவனங்களில் வழிமுறைகளை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சரியாக கண்காணிக்காத காரணத்தாலும், அந்த அரசு வைத்திருந்த கடனை தற்போது ஆளும் பா.ஜ.க அரசு அடைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாலும் தான் காரணம்.  

தி.மு.கவுடன் எந்த காலகட்டத்திலும் கூட்டணி கிடையாது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை ஆளுநர் எடுப்பார். 

தி.மு.கவினர் ஆட்சியில் இருந்த போதும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்திருந்தபோதும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாததால் இன்று தி.மு.கவின் இரட்டை வேடம் வெளிப்பட்டு விட்டது.’என்றார்.