(நா.தனுஜா)

'நம்மைச் சுற்றிலும் பலர் அருகமர்ந்திருக்கின்ற போதிலும் சிலசமயங்களில் உள ரீதியாக தனித்திருப்பவர்களாக உணர்ந்திருப்போம். தனித்திருப்பவர்களாக, பிரச்சினைகளில் இருந்து மீள முடியாதவர்களாக உணர்கின்ற அனைவரும் தற்கொலை எண்ணத்தைக் கொண்டிருப்பதில்லை. ஆனால் தனிமைப்படுத்தப்படல், மனவழுத்தம், குறிப்பிட்டுக் கூறவியலாத காரணங்களால் சிலரேனும் தற்கொலை எனும் முடிவினை நோக்கித் தள்ளப்படுகின்றார்கள். தற்கொலையின் விளைவான இறப்பிற்கு பின்னர் பிரச்சினைகளில் இருந்து முற்றாக விடுபடலாம் என்பதே அவர்களது ஒரே நம்பிக்கையாக இருக்கும்.

இவ்வாறாதொரு மனநிலையில், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு துணை மாத்திரமே. மனம் திறந்து தமது பிரச்சினைகளைப் பகிர்வதன் மூலமும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதன் மூலமும் தற்கொலையின்றி பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், ஆளுமையுடன் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டறியவும் முடியும் என்பதனை உணர்த்துவதற்கு அவர்களுக்கு ஒரு உணர்வுபூர்வமானதொரு துணையாக இருக்கத்தக்க சகமனிதன் தேவைப்படுகின்றான். எம்மத்தியிலேயே வெளிப்படுத்தாத தற்கொலை எண்ணத்தோடு அநேகர் போராடிக்கொண்டிருக்கக்கூடும். அன்போடும், நட்போடும் அணுகுவதன் மூலம் அவர்களைத் தற்கொலையிலிருந்து மீட்டெடுக்க இயலும்" என்கிறார் உளநல ஆலோசகரும், தற்கொலைத் தடுப்பு செயற்பாட்டாளருமான நிவேந்திர உடுமான்.

பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கான வழியாகத் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கின்ற சமூகமொன்று உருவாகி வருகின்றது. இலங்கை பொலிஸ் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் என்பன இணைந்து 2017ஆம் ஆண்டுக்கான தற்கொலை விபரங்கள் தொடர்பில் வெளியிட்ட தரவுகளின்படி தற்கொலைகள் அதிகமாக இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. 2016ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் தற்கொலைகள் இடம்பெறும் சதவீதத்தில் குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்பு ஏற்பட்டு வருவதனை அவதானிக்கத்தக்கதாக உள்ளதோடு, இது வருத்தத்திற்குரிய விடயமாகவும் அமைந்துள்ளது. அதுமாத்திரமன்றி தற்கொலை செய்து கொள்பவர்களில் 80 சதவீதமானோர் ஆண்களாக உள்ளனர்.

இலங்கையில் மாத்திரமன்றி உலகலாவிய ரீதியிலும் தற்கொலை என்பது இன்னமும் முற்றாகக் கட்டுப்படுத்தப்படாததும், அதேவேளை மிகச்சரியாக எதிர்வுகூற முடியாததுமான பிரச்சினையொன்றாகவே காணப்படுகின்றது. உலகலாவிய ரீதியில் 40 செக்கன்களிற்கு ஒரு தடவை நபரொருவர் தற்கொலை மூலம் உயிரிழக்கின்றார். உலக சுகாதார ஸ்தாபனம் முதற்தடவையாக வெளியிட்ட தற்கொலைத்தடுப்பு அறிக்கையின்படி தற்கொலையின் விளைவாக வருடாந்தம் 8 லட்சம் பேர் மரணிக்கின்றார்கள்.

அதன்படி நோக்குகையில் இன்றைய காலகட்டத்திலே தற்கொலை என்பது தனிமனித சுகாதாரப் பிரச்சினையாக மாத்திரமன்றி, ஒரு சமூகப் பிரச்சினையாகவும் மாறிவரும் நிலையில் உலகலாவிய ரீதியிலே இன்றைய நாள் தற்கொலைத் தடுப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்கொலைத் தடுப்பு தினத்திற்குரிய தொனிப்பொருளாக 'தற்கொலையைத் தடுப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்" எனும் கருத்து அமைந்துள்ளது.

உளநல ஆலோசகர் நிவேந்திர உடுமான் கூறியபடி ஒரு தனிநபரின் தற்கொலை எண்ணத்தை நீக்குவதற்கு இன்னுமொரு சகமனிதன் அவசியமாகின்றான். உணர்வுகளையும், பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்வதற்கும், அதற்கேற்றபடி வழி காட்டுவதற்கும் முன்வருகின்ற ஒருவனால் தற்கொலை எண்ணத்தோடு இருப்பவர்களுக்கு மறுவாழ்வளிக்க இயலும் எனும் அடிப்படையிலேயே தற்கொலையைத் தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்கிற தொனிப்பொருள் கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது.

தற்கொலை தொடர்பான போலியான நம்பிக்கைகளும், யதார்த்தங்களும்
தற்கொலை என்பது உள ரீதியிலான எண்ணம் சார்ந்தது. பொதுவாக மனவழுத்தம், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் இயலுமை இல்லாமை, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் போதாமை போன்றன தற்கொலை எண்ணத்திற்கான காரணங்களாகக் கூறப்பட்டாலும், தற்கொலை நடத்தைக்கான காரணங்களை எல்லைப்படுத்த முடியாது என்கிறது உலக சுகாராத ஸ்தாபனம். ஒவ்வொரு தனிநபருடைய மனநிலையும் வெவ்வேறானவை எனும் அடிப்படையில், அவர்களைத் தற்கொலைக்குத் தூண்டத்தக்க காரணிகளை வரையறைப்படுத்துவது பொருத்தமற்றது. எனினும் தற்கொலை தொடர்பான சில போலியான நம்பிக்கைகள் தற்கொலைக்குக் காரணமாகின்றன.

தற்கொலை குறித்து வெளிப்படையாகக் கலந்துரையாடுவது தற்கொலை நடத்தைகளைத் தூண்டிவிடக்கூடும் எனும் மனப்பாங்கு தற்கொலை எண்ணத்திலிருப்பவர்கள் அவர்களது பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளமைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. ஆகையால் கலந்துரையாடல் மூலம் சரியான தீர்வினைப் பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் கூட தற்கொலையினால் மரணிக்கின்றார்கள். ஆனால் உண்மையிலேயே தற்கொலை தொடர்பில் வெளிப்படையாகக் கலந்துரையாடுவதானது அதனைத் தூண்டிவிடுவதிலும் பார்க்க, தற்கொலைக்கு மாற்றாக உள்ள தீர்வுகளை அறிந்து கொள்ளவும், தற்கொலை எண்ணம் குறித்து மீள்பரிசீலனை செய்து கொள்ளவும் வழிசெய்கின்றது. எனவே வெளிப்படையான கலந்துரையாடல் தற்கொலையைத் தடுப்பதற்குப் பெருமளவில் உதவுகின்றது.

அதேபோல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்கள் தமது தீர்மானத்தில் உறுதியாக இருப்பார்கள் எனக் கருதுவது தவறாகும். மாறாக தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள் அநேக சந்தர்ப்பங்களில் வாழ்வதா? சாவதா? எனும் இருநிலைப்பட்ட குழப்ப நிலையிலேயே இருப்பார்கள். சடுதியாக உணர்ச்சிவசப்பட்டு, பின்விளைவுகளை ஆராயாது தற்கொலை செய்துகொள்ளும் ஒருவருக்கு சரியான தருணத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் உணர்வு ரீதியான ஆதரவு தற்கொலை எண்ணத்தை மாற்றியமைத்துக்கொள்ள உதவும்.

மேலும் தற்கொலைகள் சடுதியாக எவ்வித முன்னறிவிப்புக்களுமின்றி நடந்துவிடக் கூடியன எனும் பரவலான நம்பிக்கை காணப்படுகின்றது. ஆனால் யதார்த்தத்திலே பெரும்பாலான தற்கொலைகள் சொற்கள் மற்றும் நடத்தைகள் மூலமாக முன்கூட்டியே வெளிப்படுத்தப்படும் எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கொண்டிருக்கின்றன. அதேவேளை சில தற்கொலைகள் எவ்விதமான முன்னறிவிப்புக்களுமின்றி நடந்து விடுகின்றன என்பது நிதர்சனம் என்கின்ற போதிலும், தற்கொலைக்கான எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கண்டறிவதன் மூலம், தற்கொலையினை முன்கூட்டியே எதிர்வுகூறவும், அதனைத் தடுக்கவும் முடியும்.

சமூகத்தில் தற்கொலை தொடர்பில் காணப்படுகின்ற பரவலான நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருப்பது தற்கொலை எண்ணத்தில் இருப்பவரைக் கண்டறிந்து, அவர் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்தாலும் கூட அவர் வாழ்நாள் முழுவதும் தற்கொலை எண்ணத்திலேயே இருப்பார் என்பதாகும். தற்கொலை எண்ணத்தைக் கண்டறிந்து முறையாக வழிநடத்துவதன் மூலமும், உணர்வு ரீதியிலான ஆதரவையும், நேசத்தையும் வெளிப்படுத்துவதன் மூலமும் ஒருவரைத் தற்கொலை எண்ணத்திலிருந்து முழுமையாக மீட்டெடுக்க முடியும்.

தற்கொலை என்பது குணப்படுத்த முடியாததொரு நோய் போன்றதல்ல. மாறாக அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கக்கூடிய வகையைச் சார்ந்தது. சமூகத்தையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் திராணியற்று, மரணத்தின் வழி அனைத்திலிருந்தும் விடுதலை அடையலாம் எனச் சடுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்ற ஒருவன், அந்தக் கணத்தை ஆளுமையுடன் எதிர்கொண்டு வாழ்ந்திருந்தால் ஓராயிரம் தடைகள் கடந்து உயரங்களை அடையும் வாய்ப்பு இருந்திருக்கலாம். கணநேர உணர்வுச்சிதறலைக் கையாளும் பக்குவமின்மையும், வழி நடத்துவதற்கான வழிகாட்டி இன்மையும் பெறுமதியை நிர்ணயிக்க இயலாத உயிரைக் காவு கொள்கிறது.

'தமது உணர்வுகளைப் பகிர்வதற்கு எவருமில்லை எனும் மனநிலையில் இருப்பவர்களுடன் கதைப்பதற்கும், அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்குப் பொருத்தமான ஆலோசனைகளை வழங்கி, தீர்வுகளைக் கண்டடைய வழிகாட்டும் நோக்கிலேயே சிசிசி லைன் 1333(ccc line 1333) என்ற அமைப்பை நடத்தி வருகின்றோம். 1333 எனும் இலக்கத்தில் எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். பல்வேறு காரணங்களினால் மனவழுத்தத்தில் இருப்பவர்கள் மற்றும் தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுடன் தொலைபேசி ஊடாக எமது அமைப்பின் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் உரையாடுவதுடன், பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கன தீர்வுகளை வழங்குவார்கள். தற்கொலைகளை இழிவளவாக்குவதற்கான, முற்றாகத் தடுப்பதற்கான முயற்சியாகவே இவ்வமைப்பை நடாத்தி வருகின்றோம்" என்கின்றார் சிசிசி லைன் 1333 எனும் சேவை அமைப்பின் ஸ்தாபகர் ரணில் திலகரத்ன.

தற்கொலை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தற்கொலையைத் தடுக்கும் வகையிலும் உளநல ஆலோசகரும், தற்கொலைத் தடுப்பு செயற்பாட்டாளருமான நிவேந்திர உடுமான், சிசிசி லைன் 1333 அமைப்பின் ஸ்தாபகர் ரணில் திலகரத்ன மற்றும் பயிற்சி பெற்றுவரும் உளநல ஆலோசகர் சாரா நசூர் ஆகியோர் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 12ஆம் திகதி வரையில் நாடு முழுவதும் மேற்கொண்டிருந்த நடைபயணம் மூலம் இலங்கை முழுவதிலும் அநேகம்பேர் மனவழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையினையும், அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவர்கள் தற்கொலை எண்ணத்தினைக் கொண்டிருக்கின்ற போதிலும், அது தொடர்பில் வெளிப்படையாகக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பற்ற நிலையில் உள்ளமையினையும் கண்டறிந்துள்ளனர்.

'அவ்வாறான தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் சிலர் தாம் மனவழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையினையும், தற்கொலைத் தூண்டுதலுக்கு உள்ளாகியிருப்பதனையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதற்கு வெட்கப்படும் மனநிலையைக் கொண்டவர்களாக உள்ளனர்" எனத் தெரிவித்த சாரா, 'மேற்குலக நாடுகளில் உடல்நலம் போன்றே உளநலத்திற்கும் சமஅளவிலான முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. எனினும் தெற்காசிய நாடுகளிலே உளநலம் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையில் மனவழுத்தம் என்பது அவமானத்திற்குரிய ஒரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. ஆகையினாலேயே இங்கு தற்கொலைகள் அதிகரித்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது" எனவும் சுட்டிக்காட்டினார்.

உளநலத்தில் ஏற்படுகின்ற வீழ்ச்சிநிலை நாளடைவில் தற்கொலைக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புக்கள் உண்டு. எனவே உளநலம் தொடர்பில் வெளிப்படையாகப் பேசுதல் அவமானத்திற்குரிய விடயமாகப் பார்க்கப்படும் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், வெளித்தோற்றத்தைப் போன்றே உளநலம் குறித்து அதீத அக்கறை செலுத்தப்பட வேண்டும். அதற்கு வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்கள் மூவரினதும் ஒருமித்த கருத்தாக அமைந்தது.

உலகலாவிய ரீதியில் தற்கொலை தொடர்பான யதாரத்தங்களும், தற்கொலைத் தடுப்புத் தொடர்பான விழிப்புணர்வும் சென்றடைய வேண்டியது அவசியமாகின்றது. பின்விளைவுகள் குறித்தோ, எதிர்காலம் குறித்தோ சிந்திக்காமல் மேற்கொள்ளும் அவசர தீர்மானத்தினால் தற்கொலை செய்து கொள்ளும் நபர் மாத்திரமன்றி, அவரது உறவுகள், நண்பர்கள், நலன்விரும்பிகள் எனப் பல தரப்பினரும் பெரும் குற்றவுணர்வுக்கு உள்ளாகின்றார்கள் என்பதே உண்மை நிலையாகும். அதுமட்டுமன்றி இலகுவாகத் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளாத காரணத்தினால் உயிரொன்று இழக்கப்படுதல் மீளவும் ஈடுசெய்யப்பட முடியாததாகும்.

தற்கொலை என்பது பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கும், பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்குமான காத்திரமானதொரு வழிமுறை அல்ல. மேலும் அது வாழ்வில் ஏற்படத்தக்க அதீத நெருக்குதல்களையும், சாதகமற்ற சூழ்நிலைகளையும் சமாளிக்க உதவுகின்ற சாதகமானதொரு வழியுமல்ல. எவ்வித நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்ததாத, சார்ந்திருப்போருக்கும் இன்னல்களைத் தருகின்ற தற்காலிக எண்ணவோட்டத்தின் வெளிப்பாடே தற்கொலையாகும்.

நிதானத்துடன் சிந்திப்பதன் மூலமும், பிரச்சினைகள் தொடர்பில் வெளிப்படையாகப் பகிர்ந்து ஆலோசனை பெற்றுக்கொள்வதன் மூலமும் தற்கொலை எண்ணத்திலிருந்து மீள முடியும். அதேபோல அக்கறையுடனும், நேயத்துடனும் தற்கொலை எண்ணத்திலிருப்பவர்களை அணுகுவதன் மூலம் அவர்களை முற்றாக அதிலிருந்து மீட்டெடுக்க முடியும். மரணம் என்பது எந்தவொரு பிரச்சினைக்குமான நிரந்தர தீர்வல்ல எனும் புரிதலும், எப்போதும் தோள் கொடுப்பதற்கு உலகெங்கிலும் ஓராயிரம்பேர் நிறைந்திருக்கிறார்கள் என்கின்ற சகமனிதன் மீதான நம்பிக்கையுமே தற்கொலை எண்ணத்திற்கான நிரந்தர நிவாரணி. அந்தப் புரிதலோடு செயற்பட்டு, வாழ்வதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் தருணங்களில் வாழ்வோம்.