(எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த காலத்தில் சிங்கள அரசியல் கைதிகளை விடுதலை செய்தது போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து எற்பட்டால் அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் பாரிய பிரச்சினை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சர்வதேசரீதியிலும் இது தொடர்பாக பேசப்படுகின்றது. மனித உரிமை ஆணைக்குழுவின் அண்மைக்கால அறிக்கையின்படி  மனித உரிமை மீறப்படும் நாடுகளின் பட்டியலில் இருந்து எமது நாடு நீக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் மனித உரிமையை பாதுகாக்கும் நாடாக மனித  உரிமை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

பயங்ரவாத தடைச்சட்டம் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் அல்ல. அந்த சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை தடுத்துவைத்திருப்பது முறையானதல்ல. 

இன்று வடக்கிலோ கிழக்கிலோ அல்லது தெற்கிலோ பயங்ரவாத செயற்பாடுகள் இடம் பெறுவதாக எந்த தகவலும் இல்லை. அப்படியாயின் எவ்வாறு பயங்ரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை வைத்திருக்க முடியும்? 

அதனடிப்படையிலேயே 71,88மற்றும் 89காலப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவ்வாறே தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்றார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.