(எம்.ஆர்.எம்.வஸீம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று (10) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே திஸ்ஸ விதாரண இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எமது லங்கா சமசமாஜ கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்ய விருப்பமாக இருந்தால் அவரை இணைத்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

அவர் எமது கட்சியுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக அலரி மாளிகையில் அவர் நியமனம் பெறும்போது அவரே என்னிடம் தெரிவித்திருந்தார். 

அதனால் வடக்கில் இனவாத, மதவாத மற்றும் பிரிவினைவாதமற்ற முறையில் செயற்படும் எமது கட்சியுடன் இணைந்து செயற்பட வருமாறு நான் அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.