அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 200 பசுக் கன்றுகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5000 பசுக்கன்றுகளில் 200 பசுக்கன்றுகளே உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் அமைப்பாளர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டளவில் பால் உற்பத்தியில் தன்னிறைவை அடையும் திட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்கஷவினால் கடந்த 2014 ஆம் ஆண்டு பசுக்கன்றுகளை இறக்குமதி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

73 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 20 ஆயிரம் பசுக்கன்றுகளை அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ அரசாங்கத்தால் அவுஸ்திரேலியாவுடன் உடன்படிக்கை செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போதை தேசிய அரசாங்கத்தால் இந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு 5000 மாடுகள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.