முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்ன, சி.ஜ.டி.யில் இன்று ஆஜராகவில்லை.

ஐந்து  மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும்  காணாமல் ஆக்கியமை தொடர்பில்  பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவை விசாரணைக்கு இன்று காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சி.ஐ.டி. அறிவித்திருந்தது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப்  பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விஜேகுணரத்ன தற்போது மெக்சிகோவில் இருப்பதால் அவரால் இன்று குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராக முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோவில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விஜேகுணரத்ன மெக்சிக்கோவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில், இன்று வரை தாம் அறிந்திருக்கவில்லை என குற்ற புலனாய்வு பிரிவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.