(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் இன்னும் ஒன்றரை வருடங்களில் பலமான ஆட்சியை நிறுவுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கண்டி சிங்கள வர்த்தக சங்க சம்பத் கட்டடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவத்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது ஜனநாயக விரோத செயல்களில் ஈடுப்பட்டார். எனினும் அரசாங்கத்துக்கு தலைமைத்துவம் வழங்கினார். இருப்பினும் எதிர்க்கட்சிக்கு சென்ற பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தலைமைத்துவம் வழங்க முடியவில்லை. 

கூட்டு எதிரணியினர் ஐந்தாம் திகதி முன்னெடுத்த போராட்டத்தின் ஊடாக நாட்டை கைப்பற்றுவதாகவே கூறினர். எனினும் அன்று இரவு வரை மக்கள் பலத்தை பிடித்து வைத்திருக்க முடியவில்லை. இறுதியில் காற்று போன போராட்டமாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.