(ஆர்.ரங்கராஜ்)

தமிழகத்தின் அரசியல்களத்தை கடந்த நான்கரைத் தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அவற்றுக்கிடையிலான ஓயாத பகைமையுமே ஆக்கிரமித்திருந்தன.முதலில் அண்ணா தி.மு.க.வின் தலைவி ஜெயலலிதாவும் பிறகு தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதியும் இருவருடங்களுக்கும் குறைவான காவகட்டத்திற்குள் மரணமடைந்ததை அடுத்து மாநிலத்தில் பெரியதோர் வெற்றிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இரு பிராந்தியக் கட்சிகளும் மாறிமாறி ஆட்சிக்கு வந்த நாட்கள் முடிவுக்கு வரப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது.

தி.மு.க. அதன் தாபகர் அறிஞர் சி.என். அண்ணாத்துரை தலைமையில் 1967 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைத் தோற்கடித்து முதன்முதலாக தமிழகத்தில் அரசாங்கத்தை அமைத்தது.அதற்குப் பிறகு தி.மு.க.வும் அண்ணா தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்தன.தேசியக் கட்சிகளினால் மாநிலத்தில் ஆட்சிக்கு வருவது குறித்து நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியதிகாரத்தில் இல்லாவிட்டாலும், லோக் சபா தேர்தல்களைப் பொறுத்தவரை தொடர்ந்து கணிசமான செல்வாக்கைச் செலுத்தக்கூடிய சக்தியாக விளங்கிவந்திருக்கிறது.1971, 1977, 1980, 1984, 1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற லோகக்சபா தேர்தல்களில் அக்கட்சி ஒன்றில் தி.மு.க.வுடன் அலலது அணணா தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து பெரும்பாலான ஆசனங்களை வென்றெடுத்தது.2004, 2009 லோக் சபா தேர்தல்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெரும்பாலான ஆசனங்களில் வெற்றி பெற்றது.தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் தி.மு.க. வுக்கு அல்லது அண்ணா திமு.க.வுக்கு இரண்டாம் பட்சமான ஒரு பாத்திரத்தையே வகிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது.

தற்போது தி.மு.க.வுக்கும் அண்ணா தி. மு.க.வுக்கும் வாக்குகளைக் குவிப்பதில் பிரதான செல்வாக்கைச் செலுத்திய கருணாநிதியும் இல்லாத சூழ்நிலையில் எனைய கடசிகளும் அரசியலுக்கு புதிய வரவுகளான நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் நடிகர் ரஜினிகாந்தின் மன்றமும் அரசியல் வெளியைத் தமதாக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.

தி.மு.க.வும் அண்ணா தி.மு.க.வும் கூட , மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே உணரத் தொடங்கியிருக்கின்றன.அதனால் 2021 ஆம் ஆண்டில் மாநிலத்தில் நடத்தப்பட வேண்டியிருக்கும் சட்டசதை் தேர்தலின் முடிவுகளின் போக்கைத் தீர்மானிக்கக்கூடிய வல்லமை கொண்டிருக்கும் என்று நம்பப்படுகின்ற 2019 லோக் சபா தேர்தல்களில் கூட்டுச் சேருவதற்கு பங்காளிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன.

2014 லோக் சபா தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல்போன திமு.க. தேர்தல் கூட்டணிக்கான பங்காளிகள் யார் யார் என்பதை அனேகமாக தீர்மானித்துவிட்டதாகவே தெரிகிறது.காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என்பவை இதில் அடங்குகின்றன என்பதுடன் இடதுசாரிக் கட்சிகளையும் வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க.வையும் சேர்த்துக்கொண்டு கூட்டணியை விரிவுபடுத்துவதற்கும் உத்தேசிக்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியைத் தொலைவில் வைத்திருந்த  அண்ணா தி.மு.க. இப்போது அக்கட்சியை நோக்கி நெருங்கிவருவதில் ஆர்வம் காட்டுகிறது.துணை ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு அண்ணா தி.மு.க.அளித்த ஆதரவையும் பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை அக்கட்சி எதிர்த்து வாக்களித்ததையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது இவ்வாறான முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

சுதந்திரமாகச் செயற்படுவதாக அண்ணா தி.மு.க. உத்தியோகபூர்வமாக கூறிக்கொள்கின்ற போதிலும், நடைமுறையில் அது பிரிந்துசென்ற ரி.ரி.வி.தினகரன் தலைமையிலான குழுவிடமிருந்து சவாலை எதிர்நோக்கவேண்டியிருக்கின்ற நிலையில் தனது இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பக்கம் கடுமையாகச் சாய்ந்தே நிற்கிறது.பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அண்ணா தி.மு.க.வுக்கு சுமார் 50 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.இது ஒரு பலம்பொருந்திய பிரசன்னமாகும்.ரஜினிகாந்த் ஆரம்பிக்கக்கூடிய கட்சி, நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு தனது சொந்தத்தில் கூட்டணியொன்றை அமைப்பது குறித்து பாரதிய ஜனதா யோசித்துக்கொண்டிருக்கின்ற போதிலும், அதனுடன் 2019 லோக்சபா தேர்தலில் அண்ணா தி.மு.க.கூட்டுச் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

இந்தக் கட்சிகளையும் அண்ணா தி.மு.க.வையும் சேர்த்துக்கொண்டு பெரிய கூட்டணியொன்றை பாரதிய ஜனதாவினால் அமைக்கமுடியுமாக இருந்தால் அது மிகவும்  சாதுரியமான தந்திரோபாயமாக இருக்கும்.ஆனால், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பாட்டாளி மக்கள் கட்சியும் பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அத்தகைய பெரிய கூட்டணியை அமைப்பதென்பது மிகவும் கஷ்டமான காரியமாகவே இருக்கும என்றே தோன்றுகிறது.அதேவேளை, லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதென்பது குறித்து ரஜினிகாந்த்  இன்னமும் தெளிவான தீர்மானத்தை எடுக்கவில்லை.

ஒன்று மாத்திரம் நிச்சயமானது.தனித்துப் போட்டியிடுவதென்று 2014 ஆம் ஆண்டில் எடுத்த நிலைப்பாட்டை இப்போது கைவிட்டிருக்கும்  தி.மு.க.வும் அண்ணா தி.மு.க.வும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்துக்கொள்ளும்.சில தினங்களுக்கு முன்னர் கூடிய அண்ணா தி.மு.க.வின் நிறைவேற்றுக்குழு லோக் சபாதேர்தலுக்கான கூட்டணி குறித்து ஆராய்ந்திருககிறது.ஆனால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்போது கூட்டணி பங்காளிகள் யார் யார் என்பது குறித்து இறுதிசெய்யப்படுமென்று அது அறிவித்திருக்கிறது.மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திப்பதற்கு தனக்கு நேரம் தரப்பட்டபோதிலும் அவர் தன்னைச் சந்திக்க மறுத்தால் தனக்கு செய்யப்பட்ட அவமதிப்பு குறித்து துணை முதலமைச்சரும் கழகத்தின் இணை  ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்ச்செல்வம் கூறியபோது நிறைவேற்றுக்குழு அதற்கு கண்டனத்தைத் தெரிவித்தது.கடந்த சில மாதங்களாக தேசிய மட்டத்தில் பாரதிய ஜனதாவுக்கு அண்ணா தி.மு.க. ஆதரவு அளித்துவருவது குறித்து இரண்டாவது மட்டத் தலைவர்கள் சிலர் அதிருப்தியை வெளியிட்டனர்.பாராளுமன்ற வாக்கெடுப்புகளின்போது கழகத்தின் எம்.பி.க்கள் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்திருக்க வேண்டும் என்பதே அந்த தலைவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது.மாநிலத்தின் நலன்கள் கருதி  மத்தியுடன் நல்லுறவுகளைக் கழகம் பேணுகின்றதே தவிர, பாரதிய ஜனதாவுடன் எந்தக் கூட்டணியிலும் அங்கமாக இருக்கவில்லை என்று ஒரு விளக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுக்குழுவுக்கு அளிக்கவேண்டியிருந்தது.

அவ்வாறிருந்தபோதிலும், தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு கூட்டணிப் பங்காளிகள் அவசியமாகத் தேவைப்படுவதால் லோக்சபா தேர்தலின்போது இரு கட்சிகளும் கூட்டணியொன்றை அமைத்துக்கொள்ளலாம் என்றே தெரிகிறது.

கமல் ஹாசன், ரஜினிகாந்த் போன்ற புதிய பாத்திரங்கள் அரசியல் களத்தில் பிரவேசிப்பதால் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.அவர்கள் தனித்துப் போட்டியிடுவார்களா அல்லது கூட்டணியொன்றில் இணைந்துகொள்வார்களா என்பது இன்னமும் தெரியவில்லை.சுதந்திரமான நிலைப்பாடொன்றை எடுப்பதிலேயே அவர்கள் இருவரும் நாட்டம் காட்டுகின்றார்கள் போன்றே தற்போதைக்கு தெரிகிறது.அவர்கள் யாரின் வாக்குகளை அரித்தெடுப்பார்கள்? இது தொடர்பில் இன்னமும் திட்டவட்டமான அறிகுறிகள் தெரியவில்லை.வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.க.போன்ற சிறிய கட்சிகள் தி.மு.க. தலைமையிலான கூட்டணி நோக்கி நெருங்குவதாகவே தோன்றுகிறது.

கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், விவேகமான அரசியல் தந்திரசாலியும் நல்ல பேச்சாளருமான கருணாநிதி இல்லாமல் அக்கட்சி புதியதோர் யுகத்தைத் தொடங்குகின்றது. கருணாநிதி சுகவீனமுற்றிருந்த கடந்த இரு வருட காலத்தில் கட்சியை நிருவகித்த ஸ்டாலின் முக்கியமான தேர்தலொன்றில் கட்சிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்து தனது ஆற்றலை நிரூபிக்கவேண்டியவராக இருக்கிறார்.ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சியதிகாரத்தை நோக்கி நெருங்குகின்ற ஆரு கட்சியாக தன்னைக் காட்டிக்கொள்கின்ற தி.மு.க.ஆர்.கே.நகர் இடைத்தேரதலில் கட்டுப்பணத்தைக் கூட காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.2019 தேர்தல்களை ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்கான முதலாவது பரீட்சையாக நோக்கமுடியம்.அவருடன் முரண்பட்டுக்கொண்ட சகோதரர் மு.க. அழகிரி தனிக்கட்சியொன்றை அமைப்பாரேயானால் அதனால் தி, மு.க.வின் வாக்கு வங்கிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.கட்சி  ஸ்டாலினின் பின்னால் உறுதியாக அணிதிரணாடு நிற்கின்ற போதிலும் அழகிரியினால் தொல்லைகளைக் கொடு்கமுடியும்.

தி.மு.க. காங்கிரஸுடன் அணிசேர்ந்து நிற்கின்ற நிலையில் அதனுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்வதற்கு இடதுசாரிக் கட்சிகளின் தேசிய தலைமைத்துவங்கள் எதிராக நின்றால் அக்கட்சிகள் கமல்ஹாசனி்ன் கட்சியுடனும் ஏனையவர்களுடனும் சேர்ந்து மூன்றாவது கூட்டணியொன்றை அமைக்கக்கூடும்.ஆனால், தி.மு.க.-- காங்கிரஸ் கூட்டணியில் சேருவதற்கான விருப்பத்தையே இடதுசாரிக்கட்சிகளின் மாநிலத் தலைமைத்துவங்கள் கொண்டுள்ளன என்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.மாநிலத்து நிலைவரங்களை அடிப்படையாகக்கொண்டு அத்தகைய கூட்டணியில் இணைந்துகொள்வதற்கு இடதுசாரிக்கட்சிகளின்  தேசிய தலைமைத்துவங்கள் அனுமதிக்கும் என்று மாநிலத் தலைமைத்துவங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன.

கமல்ஹாசன், ரஜினிகாந்தின் நிலைப்பாடுகள் போன்று கணிப்பிடமுடியாத பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் பல முனைப் போட்டிக்கான சாத்தியப்பாடுகள் தோன்றலாம் என்று எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கும் நிலையில் , லோக்சபா தேர்தலில் ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கு தங்களது அணிகளுக்குள் கூடுதலான கட்சிகளைக் கொண்டுவரவேண்டிய தேவையை பிரதான கட்சிகள் உணருகின்றன.கள நிலைவரம் உண்மையில் குழப்பமானதாகவே இருக்கிறது.தங்களது பாரம்பரிய வாக்கு வங்கிகளுக்குள் சிறிய கட்சிகள் பெருமளவுக்கு ஊடுருவாமல் இருப்பதை பிரதான கட்சிகள் உறுதிசெய்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.

நன்றி:  நெஷனல் ஹெரல்ட் , இந்தியா

(வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுத்தளம்)