(எம்.மனோசித்ரா)

சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டுள்ள சுதந்தர வர்த்தக ஒப்பந்தம், பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே கைச்சாத்திடப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக எமது நாட்டின் தேசிய தொழில், தேசிய வியாபாரம் மற்றும் உள்ளநாட்டு தொழில் வாய்ப்புக்கள் அற்று போகும். உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி குறைவடையும் நிலை ஏற்படும். 

இவ் ஒப்பந்தம் ஜனவரி 23 ஆம் திகதி கைசாத்திடப்பட்டு இன்று வரையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. நாட்டு மக்களுக்கும் இது தொடர்பில் தெரியாது. எனினும் மே முதலாம் திகதி முதல் இவ்வொப்பந்தம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. 

இதன் மூலம் நூற்றுக்கு ஐம்பது வீதம் பொருட்களுக்கான வரி விலக்களிப்படுகின்றது. மேலும் சர்வதேச ரீதியில் வருமானம் பெறக் கூடிய பிஸ்கட் உற்பத்திகள், இறப்பர் உற்பத்தி மற்றும் சுண்ணாம்பு உற்பத்திகள் உள்ளிட்டவை மூலமான வருமானம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. 

எனவே இந்த ஒப்பந்தத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான வேலை திட்டத்தை அனைத்து பிரதேசங்களிலும் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.