தி.மு.க.வில் தான் வளர்ந்து விட கூடாது என்பதற்காக தந்தையிடம் பேசி மிரட்டும் தொனியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து தன்னை நீக்கி விட்டதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, 

 2014ஆம் ஆண்டு என்னை கட்சியில் இருந்து நீக்கியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன். தொண்டர்களுக்காக பாடுபட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துக் கொண்டு காட்டினேன். அதனால் கலைஞருக்கு என்னை நீக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. பொதுச்செயலாளருக்கு கூட அந்த எண்ணம் கிடையாது.

என்னை நீக்கியதில் பல சதிகள் இருக்கிறது. நான் வளர்ந்து விட போகிறேனோ என்ற எண்ணம் சிலருக்கு இருந்தது. ஜெயலலிதா இருக்கும் போதே நான் எதிர்த்து பல வெற்றிகளை பெற்றவன். என் மீதும், மனைவி, மகன் மீதும் பல வழக்குகளை தொடுத்தனர்.

நான் வளர்ந்து விட போகிறேன் என பயந்து தந்தையிடம் பேசி மிரட்டும் தொனியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து என்னை நீக்கச் செய்யுமாறு சதி செய்து விட்டனர்.

2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது கலைஞரை நேரில் சந்தித்து கட்சியில் மீண்டும் இணைத்து கொள்ளுமாறு கேட்டேன். அவர் கொஞ்ச நாள் அமைதியா இருப்பா. மீண்டும் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

அதன் பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்து விட்டது. அவரால் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில் கட்சியில் சேர்க்குமாறு கேட்டால் தொல்லையாக இருக்கும் என்று கருதி உடல் நிலை குணமடையட்டும் என காத்திருந்தேன். ஆனால் அவர் என்னை கட்சியில் சேர்க்க நினைத்து இருக்கலாம்.

நான் கட்சிக்கு வந்தால் எனக்கு ஆதரவு பெருகும் என முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் பயந்து இருக்கலாம். அதனால் என்னை சேர்க்கவிடாமல் தடுத்து இருக்கலாம்.

எனக்கு ஆதரவு குறைந்து விட்டதா? இல்லையா? என்பது போக போக தெரியும். நான் நடத்திய பேரணியில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். பொதுக்குழு மட்டும் தி.மு.க. அல்ல. அவர்கள் கூறுவது தான் தி.மு.க.வா?

அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலேயே ஜனநாயகம் இல்லை. அதை தான் நான் 2014இல் குற்றம் சாட்டினேன்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு குருட்டு போக்கான நம்பிக்கைதான் காரணம். ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 57 ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொண்டார் அவரை மீண்டும் வேட்பாளராக்காமல் யாரையோ நிறுத்தினார்கள்.

ஜெயலலிதாவை எதிர்த்து 57 ஆயிரம் வாக்குகளை பெற்றுக்கொண்ட  தி.மு.க. டி.டி.வி. தினகரனை எதிர்த்து 24 ஆயிரம் வாக்குகளை பெற்றுக் கொண்டது தி.மு.க.வின் சரிவுதான்.

பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தேர்தலிலும் கலைஞருக்கு தெரியாமல் அவர்களாக வேட்பாளர்களை நிறுத்தினார்கள். வேட்பாளர்களை கலைஞர் நிறுத்தி இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருக்கலாம்.

என்னை தி.மு.க.வில் சேர்க்கவில்லையென்றால் பின் விளைவுகள் ஏற்படும். தேர்தலில் தி.மு.க. தோல்வி அடையும். கட்சி இன்னும் பின்னடைவை சந்திக்கும் இனிமேல் தி.மு.க.வுக்கு மு.க. அழகிரிதான் சவால்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் மு.க.அழகிரி இல்லாமல் தி.மு.க.வால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.

2ஆவது இடத்துக்கு கூட வர முடியாது. 3ஆவது இடத்துக்குதான் வருவார்கள். 4ஆவது இடத்துக்கு சென்றாலும் ஆச்சரியம் இல்லை.

என்னை கட்சியில் சேர்த்துக் கொண்டால் மட்டுமே மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்பேன் என்று கூறினேன். என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் நான் எப்படி ஸ்டாலினை தலைவராக ஏற்க முடியும்.

துணை முதல்வர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகள் ஸ்டாலினுக்கு எப்படி கிடைத்தது என்பதை அவரது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். அதை நான் சொல்ல மாட்டேன், அவரது மனசாட்சிக்கு எல்லாம் தெரியும்.

ரஜினி காந்துக்கு அடிமட்ட மக்களை கவரும் சக்தி இருக்கிறது.

ரஜினி என் தந்தை மீது பிரியமுள்ளவர். அவரது ரசிகர்கள் தி.மு.க.விலும் நிறைய பேர் உள்ளனர். அதனால் அவர் கட்சி தொடங்கினால் அவர்கள் அங்கு செல்ல வாய்ப்புண்டு .

கலைஞரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட அரசியல் பாடம், அவருடைய உழைப்பு, சுயமரியாதை. அவர் உறங்காமல் உழைக்க கூடியவர். அப்பாவின் அரசியலை பார்த்து நாங்கள் முழுநேர அரசியல்வாதியானோம் என்றார் அமு.க.அழகிரி.