பிரபல பாடலாசிரியரான நிலார் என்.காசிமின் கால் நூற்றாண்டு கலைப் பயணத்தை பாராட்டும் “சரச வசந்தய” (இசை வசந்தம்) நிகழ்வு மற்றும் நூறு பாடல்களை உள்ளடக்கிய பிளேஷ் டிரைவ் பாடல் வெளியீட்டு விழா  ஜனாதிபதியின் தலைமையில் நேற்று பிற்பகல் இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

“சரச வசந்தய” நூல் மற்றும் நூறு பாடல்கள் அடங்கிய பிளேஷ் டிரைவ் நிலார் என்.காசிமினால் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி நிலார் என்.காசிமிற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார். 

இந்த நிகழ்வின் பிரதான உரை பேராசிரியர் ஜே.பி.திசாநாயக்கவினால் நிகழ்த்தப்பட்டதுடன், சமன் அதாவுடஹெட்டி மற்றும் நதீக குருகே ஆகியோரும் உரை நிகழ்த்தினர். 

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இன்று நாட்டில் முக்கிய பிரச்சினையாக இருந்துவரும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பணியில் நிலார் என்.காசிம் போன்ற கலைஞர்களை முக்கிய ஆளுமைகளாக அறிமுகப்படுத்த முடியுமெனக் குறிப்பிட்டார். 

மேலும் நிலார் என்.காசிமினால் எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய மூன்று இறுவட்டுகளும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அவரினால் எழுதப்பட்ட பாடல்கள் நேரடியாக இசைக்கப்பட்டமை நிகழ்வை மேலும் மெருகூட்டுவதாக அமைந்திருந்தது. 

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இனோக்கா சத்யாங்கனி, ரவீந்தர ரந்தெனிய, மாலனி பொன்சேகா ஆகியோர் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.