தங்கிவாழும் மனநிலையிலிருந்து விடுபட்டு சுய முயற்சியில் எழுந்திருக்க கூடிய தேசத்தை கட்டியெழுப்பும் பேண்தகு அபிவிருத்தி வழிகளில் அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் சமுர்த்தி நிவாரண உதவி திட்டத்தின் கீழ் மேலும் ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு   நேற்று பிற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பல்வேறு காரணங்களினால் இதுவரை சமுர்த்தி நிவாரண உதவி கிடைக்கப் பெறாத, அதற்கு தகுதி பெற்றுள்ள மேலும் ஒன்றரை இலட்சம் குடும்பங்கள் இந்த நிகழ்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி நன்மைகளை பெற்றுக்கொள்ளவுள்ளனர். “பாதுகாப்பான இலங்கை - பலமான சமூகம் 2030ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை நோக்கி சமூகத்தை வலுவூட்டுதல்” என்ற கருப்பொருளின் கீழ் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இத்தகைய நிவாரண உதவிகளை வழங்க கிடைத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடையும் அதேநேரம், தொடர்ச்சியாகவே தங்கி வாழும் மனோநிலையிலிருந்து விடுபட்டு சுய முயற்சியில் எழுந்திருப்பதற்கு அவர்கள் உறுதிபூண்ட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதற்கு உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு கடன் முன்மொழிவு முறைமைகள் உள்ளிட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி ஒருவர் சுயமுயற்சியில் எழுந்திருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவரும் நாடும் முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும் என்றும் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி இன்று நாட்டின் அபிவிருத்தியில் நிதி ரீதியாக எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

அரசாங்கம் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் அடைந்திருக்கும் சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இன்று சர்வதேசத்தின் அனுசரணை கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இலங்கைக்கு கடனுதவி வழங்கும் சில சர்வதேச நிறுவனங்களுடன் அண்மையில் தான் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இத்தகைய உதவிகளை தொடர்ந்தும் அதிகரிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் மேலும் தெரிவித்தார். 

அரசியல் துறையிலும் அரசாங்க சேவையிலும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றினால் இந்த நாட்டிலுள்ளவர்களை முன்னேற்றத்தை நோக்கி கொண்டு செல்வது கடினமானதல்ல என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

மக்களின் வறுமையை இல்லாதொழித்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல் பேதங்களின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 3,800 குடும்பங்களுக்கு புதிதாக சமூர்த்தி நிவாரண உதவிகள் கிடைக்கப் பெறுவதுடன், அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் 21 பேருக்கு ஜனாதிபதியினால் அதற்கான ஆவணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

பிரதேச மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமய தலைவர்கள், சமூக வலுவூட்டல் அமைச்சர் பீ. ஹரிசன், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அமைச்சின் செயலாளர் ஷிரானி வீரகோன், பொலன்னறுவை மாவட்ட செயலாளர் எஸ்.பீ. அபேவர்தன, சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஜெனரல் நிமல் கொடவலகெதர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.