(ஆர்.யசி)

வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  இனவாதி அல்லர்,  எனினும் அரசியல் நோக்கங்களுக்காவும் குறுகிய காலதில் தலைவர்களாக மாறவும் இனவாதம், மதவாதம் என்பவற்றை கையில் எடுக்கின்றார்கள் என என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

வட்டு இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார்.  

அங்கு தொடர்ந்தும் கூறியிருப்பதானது, 

மக்கள் மத்தியில் விரைவாக தலைவராக வருவதற்கு சுலபமான வழி இருக்கின்றது. அதுதான் இனவாதம், மொழிவாதம், குலவாதம் பேசுவது. 

வேறு ஒன்றும் தேவையில்லை குறுகிய காலத்திற்குள் தலைவராவதற்கு. தேர்தல் காலம் நெருங்கும்போது இனவாதம் மொழிவாதம் குலவாதம் பேசுகிறார்கள். 

அவை தேர்தல் காலத்தில் மட்டுமேதான்.  வெள்ளவத்தை பக்கத்திலே தமிழ் மக்கள் வீடு கட்ட முடியும். கோவில் கட்ட முடியும். கோவில்களில் விழா கொண்டாட முடியும். 

அங்கு எங்கும் எந்த தடையும் இல்லை. இங்கே ஒரு சிலை வைத்தால் பாரிய பிரச்சினைகள் எழுக்கின்றன. பௌத்த விகாரைக்குள் நீங்கள் போவதற்கு  பெயரை மாற்றத் தேவை இல்லை. மதம் மாற வேண்டியதில்லை. அதேபோன்று பௌத்த மக்கள் இந்து கோவிலுக்குள் போன்றதற்கு தடை ஏதும் இல்லை. பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் நல்லூர் கோவிலுக்குள் சென்று வழிபடுவதை நான் கண்டிருக்கின்றேன் என்றார்.