முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்திருக்கிறார்.

இது கு றித்து மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  விருப்பமும் கொள்கையாகவும் அது தான் இருந்தது. இதற்காகவே அப்போது சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அதன் பிறகே மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு தடை ஆணை பெற்றது. 

குறித்த விவகாரத்தில் சில உத்தரவுகளை உயர் நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதை முழுமையாக ஆய்வு செய்து, அது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார்.’ என்றார்.

இதனிடையே இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘

 ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப நடவடிக்கை இருக்கும். யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசிற்கு இல்லை.’ என்று தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.