ஆசிய கிண்ணப்போட்டிகளில் விராட்கோலி விளையாடாததால் அவரின் விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைக்காதது குறித்து பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் ஹசன் அலி ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

விராட்கோலி சிறந்த வீரர் அவர் போட்டிகளை வென்றுகொடுக்க கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணப்போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் அவர் இடம்பெறாதபோதிலும்  அந்த தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வலுவானதாகவே காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விராட்கோலி நெருக்கடியான சூழலை கையாள்வது போன்று ஏனைய வீரர்களால் நெருக்கடியான நிலையை கையாள முடியாது இதுவே எமக்குள்ள வாய்ப்பு எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்கள் அனைவரும் விராட்கோலியின் விக்கெட்டை கைப்பற்ற விரும்புவது வழமை எனக்கும் அந்த ஆசையுள்ளது எனினும் துரதிஸ்டவசமாக அவர் இந்த தொடரில் விளையாடததால் அந்த வாய்ப்பு கிடைக்காது எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயம் அவரின் விக்கெட்டை வீழ்த்த முயற்சிப்பேன் எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தானிடம் தோல்வியடைந்ததன் காரணமாக இந்திய அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும் எனவும் தெரிவித்துள்ள ஹசன் அலி எனது இரசிகர்களை சந்தோசப்படுத்துவதற்காக பத்து விக்கெட்களையும் வீழ்த்த விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணப்போட்டிகள் இடம்பெறப்போகின்ற ஆடுகளங்கள் பாக்கிஸ்தானிற்கு நன்கு பரிச்சயமானவை நாங்கள் இங்கு மிக நீண்ட நாட்களாக விளையாடிவருகின்றோம் இதுவும் எங்களிற்கு சாதகமான விடயம் எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.