(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் வலி வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட பொது மக்களின் காணிகள் முழுமையாக மக்களிடம் கையளிக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 27 வருடங்களிற்கு முன்னர் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்கள் தமது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். இதனால் அம் மக்களது காணிகளை இராணுவம் தனது உயர் பாதுகாப்பு வலய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. 

இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களது காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் இன்றைய தினமும் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம், தெல்லிப்பழை கூட்டுறவு சங்க கட்டடம், கிராம சங்க கட்டடம் மற்றும் ஆணைகோட்டை குளாவடி இராணுவம் முகாம்  என்பன விடுவிக்கப்பட்டிருந்தன.

இதில் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய இடங்களுக்கு போடப்பட்டுள்ள கம்பி கட்டைகள் இன்னமும் இராணுவத்தால் அகற்றப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே விடுவிக்கப்பட்ட இடங்களில் காணப்படும் இராணுவ முட்கம்பி கட்டைகளை விரைவாக அகற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதேவேளை இவ்வாறு கம்பிகட்டைகள் இன்னமும் அகற்ப்படாமை குறித்து இராணுவத்தினருக்கு அறிவித்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெல்லிப்பழை பிரதேச செயலர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.