(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் கட்டபிராய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவமொன்றில் பெண் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை ஆறு மணியளவில் கட்டைபிராய் - ஆடியபாதம் வீதியில் உள்ள இரண்டு வீடுகளின் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீடுகளில் முதலில் ஒர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத சிலர் வீட்டினுல் புகுந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்து பெண் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து அருகில் இருந்த மற்றொரு வீட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்திய நிலையில் அங்கிருந்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மேற் குறித்த இரு வீடுகளிலும் நடத்தப்பட்ட தாக்குதலில் வீடுகளில் காணப்பட்ட பொருட்கள், வீட்டு கதவுகள் ஜன்னல்கள் என்பனவும் சேதமடைந்துள்ளது.

இந் நிலையில் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல் தாரிகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.