பொதுமக்களுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக நேற்றிரவு சத்தியாக்கிரகம் செய்வதாக பேரணியை ஏற்பாடு செய்த அரசியல்வாதிகள் கூறினார்கள். இறுதியில் அப்பாவிகள் மாத்திரமே வீதியில் கிடந்தார்கள். அரசியல்வாதிகள் ஷங்கரில்லா மற்றும் ஹில்டன் ஹோட்டல்களில் இரவு பொழுதை கழித்தார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஊடக தகவல் மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் பிரதியமைச்சர் நளின் பண்டார இதனைத் தெரிவித்தார்.

"பேரணியில் கல்ந்துகொண்டவர்கள் அனைவரும் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை அண்மித்த பிரதேசத்திற்குச் சென்று அங்கு வீதிகளில் உட்கார்ந்து சத்தியாக் கிரகத்தில் ஈடுபட்டனர்.

இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் நேற்று இரவு முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவும் சில அரசியல்வாதிகளும் பங்கேற்றார்கள். இவர்கள் சிறிது நேரமே அங்கே இருந்தனர். பின்னர் இரவு பொழுதை ஷங்கரில்லா, ஹில்டன் ஹோட்டல்களில் கழித்தனர்.

இறுதியில் அப்பாவி மக்கள் மாத்திரம் நடு வீதியில் அநாதரவாக காணப்பட்டனர்" என்றார்.