11 ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றில் இலங்கை அணி நடப்புச் சம்பியனான மலேஷியாவை வீழ்த்தி தனது அபாரமான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.ஆசிய நாடுகளில் 12 அணிகள் பங்கேற்றுள்ள 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம்  இரண்டாம் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.

இத் தொடரில் கலந்துகொண்டு விளையாடிவரும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் சைனிஸ் தாய்பே அணியை 137–5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்தது. 

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியாவை 101–29 என வீழ்த்தியது. இந்த 3 வெற்றிகளுடன் இலங்கை அணி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரம்பமான இரண்டாவது சுற்றின் முதல் போட்டியில் சிங்கப்பூர் அணியை 74-–61 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்திய இலங்கை அணி நேற்று ஆசிய சம்பியன்ஷிப் தொடரின் நடப்பு சம்பியனான மலேஷியாவை எதிர்கொண்டது.

பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் இரு அணிகளும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி எதிரணிக்கு கடும் சவாலாக விளங்கின. ஒவ்வொரு அணியும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள புள்ளிகள் பட்டியல் சரிசமமாகவே நகர்ந்தது.

இறுதியில் முந்திக்கொண்ட இலங்கை அணி 62-–59 என்ற புள்ளிகள் அடிப்படையில் நடப்பு சம்பியனை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்து கொண்டது. 

இரண்டாவது சுற்றின் மூன்றாவது போட்டியில் இன்று ஹொங்கொங் அணியை சந்திக்கின்றது இலங்கை.