(பங்களாதேஷிலிருந்து நெவில் அன்தனி)

டாக்கா பங்கபந்து விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 12 ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனக் கிண்ணத்துக்கான போட்டியில் குழு "பி" யில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் இந்தியாவிடம் 0–2 என்ற கோல்கள் அடிப்படையில் தோல்வியைத் தழுவியது.

கோல் காப்பாளர் சுஜான் பெரேராவின் கவனக் குறைவினா லேயே இந்தியா இரு கோல்களையும் போட்டது.

ஆட்டம் ஆரம்பித்தது முதல் இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்த இந்தியா 4ஆவது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பொன்றைத் தவறவிட்டது. 

ஜேர்மன்ப்ரீத் சிங் களத்தின் மத்திய பகுதியிலிருந்து பரிமாறிய பந்தை கசம் சௌ கோலாக்கத் தவறினார்

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் தனது எல்லையிலிருந்து இலங்கை வீரர் எம்.என்.எம்.பஸால் எதிரணி எல்லைக்கு பந்தை வேகமாக நகர்த்திச் சென்ற போதிலும் அதனால் பலன் எதுவும் கிடைக்கவில்லை. 

போட்டியின் 18ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர் சஜித் குமாரவை இந்திய பின்கள வீரர் சர்தக் கொலுய் வீழ்த்தியதால் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார். அச் சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெற்ற ப்ரீ கிக்கை எம்.சி.எம்.ரிவ்னாஸ் தாழ்வாக உதைக்க பந்து இந்திய வலது கோல்காப்பை அண்மித்தவாறு வெளியே சென்றது. அடுத்த நிமிடம் கவிந்து இஷான் வலப்புறத்திலிருந்து பரிமாறிய பந்தும் வீண் போனது.

மேலும் 7 நிமிடங்கள் கழித்து இடது புறத்திலிருந்து சஜித்குமார பரிமாறிய பந்தினால் பலன் கிடைக்கவில்லை.

சற்று நேரத்தில் இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா  இரண்டாவது தடவை அநாவசியமாக நேரத்தைக் கடத்தியதால் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானார்.

இதனைத் தொடர்ந்து 35 ஆவது நிமிடத்தில் லலியன்சுவாலா களத்தின் மத்திய பகுதியிலிருந்து வலப்புறமாக பரிமாறிய பந்தை முன்னோக்கி நகர்த்திய ஆஷிக் குருநியன் மிகவும் அலாதியாக கோலினுள் புகுத்தி இந்தியாவை 1–0 என முன்னிலையில் இட்டார்.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த இரண்டாவது நிமிடத்தில் மிகவும் சிரமமான கோணத்திலிருந்து இந்திய வீரர் லலியனசுவாலா உதைத்த பந்து கோல் காப்பாளர் சுஜான் பெரேராவுக்கு மேலாக சென்று கோலினுள் புகுந்தது.

அதன் பின்னர் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கியதுடன் இலங்கை அணியினர் தடுத்தாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனிடையே சுஜான் பெரேரா கடும் முயற்சிகளை எடுத்துக்கொண்டு பல கோல் போடும் வாய்ப்புகளைத் தடுத்து நிறுத்தினார்.