சென்னையில் எம்முடைய தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் பங்குபற்றிய இலட்சக்கணக்கான தொண்டர்களை தி.மு.க.விலிருந்து ஸ்டாலின் நீக்குவாரா? என கருணாநிதியின் மகனும்,முன்னாள் மத்திய அமைச்சருமான மு. க. அழகிரி கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது, 

‘மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மட்டும் தான் இந்த பேரணி நடைபெற்றது. வேறு காரணங்கள் எதுவுமில்லை. எம்முடைய தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஒன்றரை இலட்சம் தி.மு.க. தொண்டர்கள் பங்குபற்றினர். எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த பேரணியில் பங்குபற்றி இலட்சக்கணக்கான தொண்டர்களை தி.மு.க.விலிருந்து ஸ்டாலின் நீக்குவாரா? என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக மு. க. அழகிரியின் தலைமையில் இலட்சக்கணக்கில் திரண்டிருந்த தி.மு.க.வினர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து கலைஞரின் நினைவிடம் வரை அமைதி பேரணியாக சென்று கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே கலைஞர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அவர் தி.மு.க.வில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கைணை ஸ்டாலின் ஏற்கவில்லை. அதனால் கட்சியில் தன்னுடைய வலிமையைக் காட்டுவதற்காக அமைதி பேரணி என்ற போர்வையில் மு. க.அழகிரி இந்த பேரணியை நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.